மீனவர் ஜெயக்குமார் சிங்களக் கடற்படையால் படுகொலை தமிழீழ, தமிழ்நாட்டு மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிற சிங்கள, இந்திய அரசுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!


வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர் ஜெயக்குமார் சிங்கள இனவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 12Š01Š2011 அன்று நாகை மாவட்டம் சின்னங்குடியைச் சேர்ந்த மீனவ இளைஞர் பாண்டியன் இதே சிங்கள இனவெறியர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்த வேதனையின் வலி மறைவதற்குள் மீண்டும் ஒரு படுகொலை என்பது இடிமேல் இடி விழுந்த பெருங்கொடுமையாய் நெஞ்சைச் சுட்டெரிக்கிறது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்தச் சிங்களப் பயங்கரவாதக் கொடுமைகளுக்கு ஒரு முடிவே இல்லையா என்னும் வேதனை மேலிடுகிறது. இந்திய அரசைப் பற்றியோ தமிழ்நாட்டு மக்களைப் பற்றியோ துளியளவும் சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு அச்சமில்லை என்பதையே இது காட்டுகிறது. அடுக்கடுக்கான படுகொலைகள் நடந்தும்கூட இந்திய அரசு இத்தகைய போக்குகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது சிங்களவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவே அமைகிறது. சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி வந்து தமிழக மீனவர்களின் உடைமைகளைச் சூறையாடுவதும் எண்ணற்ற உயிர்களைப் பறிப்பதும் சிங்களவர்களின் வாடிக்கையாகவே அமைந்துள்ளது.

கடந்த 1983லிருந்து தொடரும் இந்தக் கொடுமைகளைக் கண்டிக்கவோ தடுக்கவோ இந்திய அரசு ஒரே ஒரு முறை கூட முன்வரவில்லையயன்பது மேலும் வேதனையளிக்கிறது. இந்நிலையில், கொலைகாரச் சிங்களக் கும்பலுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஆதரவு நல்கி வரும் இந்திய அரசிடமே நாம் முறையிட வேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழீழ மக்களை மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிற இந்திய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

படுகொலையான ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இழப்பீட்டுத் தொகையாக அவரது குடும்பத்திற்கு ரூபாய ஐந்து இலட்சம் வழங்கியுள்ள தமிழக அரசு, அதனை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்

 (தொல். திருமாவளவன்)

1 கருத்துகள்:

அண்ணன் அவர்களே நீங்கள் தமிழக அரசின் நிலைப்பாட்டையும் மெத்தனத்தையும் சுட்டி காட்ட வேண்டும். எப்போதுமே நம் மீது சேறு வாரி பூச நினைக்கும் கும்பலுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
இனைய தளங்களில் உங்கள் செய்திகளுக்கான பின்னூட்டங்களை படிக்கிற பொது மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது.
உங்களுக்கு ஆதரவான பின்னூட்டங்களை, செய்திகளை வெளியிடும் இனைய தளங்களும் பிரசுரிப்பதும் இல்லை.

அன்புராஜ்.

28 ஜனவரி, 2011 அன்று 1:24 AM comment-delete

கருத்துரையிடுக