மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக'' அறிவிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் பிரச்சார இயக்கம் தொல்.திருமாவளவன் அறிக்கை!


சிங்கள இனவெறி ஒடுக்குமுறைகளை எதிர்த்து அறவழியில் கால்நூற்றாண்டு காலம் போராடியும் நீதி கிட்டாத நிலையில் ஈழத் தமிழர்கள் ஆயுதவழிப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆயுதவழிப் போராட்டமும் மக்களைப் பாதுகாப்பதற்கான தற்காப்புப் போராட்டமாகத் தொடங்கி பின்னர் விடுதலைப் போராட்டமாகப் பரிணாமம் பெற்றது. இப்போராட்டம் கால்நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று உலகின் கவனத்தைத் திருப்பியது. எனினும் ஆதிக்க வெறிபிடித்த ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டு முயற்சியில் ஈழ விடுதலைப் போராட்டம் தற்போதைய நிலையில் நசுக்கப்பட்டுள்ளது. மொழி, இன அடிப்படையிலான சனநாயகப் போராட்டங்களை அங்கீகரிக்காத நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. இந்திய அரசும் தமிழின விரோதக் கொள்கையை தமது வெளியுறவுக் கொள்கையின் அங்கமாகவே ஏற்று வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது. உழைக்கும் மக்கள் சனநாயகத்திற்கு எதிரான இந்தியா, சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு கடந்த 2009 மே மாதத்தின்போது சிங்கள இனவெறி அரசு ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை அரங்கேற்றியது. கடைசி ஐந்து நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது. இந்நிலையில் ஐ.நா. பேரவையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இரு ஆண்டுகள் கழிந்த நிலையில் ஈழத்தில் போர்க் குற்றம் நடந்துள்ளதென அறிக்கை வெளியிட்டுள்ளது. சிங்கள அரசும் விடுதலைப் புலிகளும் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக போர்க் குற்றம் செய்துள்ளனர் என்று இரு தரப்பின் மீதும் குற்றம் சாட்டியுள்ளது. அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடந்துவரும் சிங்கள இனவெறி ஒடுக்குமுறைகளின் பின்னணியை ஆராயாமல் அல்லது அதைப் பொருட்படுத்தாமல் கடைசிக்கட்டப் போரில் யார் குற்றம் இழைத்தார்கள் என்கிற கோணத்தில் மட்டுமே இந்த விசாரணைக் குழு ஆய்வு செய்திருக்கிறது. இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் இருதரப்பாரும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் போன்ற ஆயுதமில்லாத அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வெறும் போர்க் குற்றம் என்கிற அளவிலேயே அதனைச் சுருக்கிப் பார்ப்பது சனநாயகத்திற்கும் நீதிக்கும் எதிரானதாக அமையும். முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய கடைசிகட்ட நிகழ்வுகள் அரை நூற்றாண்டு கால சிங்கள இனவெறி ஆதிக்கத்தின் தொடர்ச்சியேயாகும். முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பானது ஒரு மாபெரும் இனப்படுகொலையேயாகும்.

எனவே சர்வதேசச் சமூகமும், ஐ.நா. பேரவையும் முள்ளிவாய்க்காலில் நடந்தவை போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்காமல் அது ஒரு கொடூரமான இனப்படுகொலை என ஏற்று அதன் அடிப்படையில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முன்வரவேண்டும்.

குறிப்பாக, இராஜபக்சேவை "இனப்படுகொலைக் குற்றவாளி' என அறிவித்து தண்டனை வழங்க வேண்டும். அத்துடன் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிகழ்ந்த மாபெரும் இனப்படுகொலை என்கிற வகையில் தமிழின அழிப்பை நிறைவு செய்த நாளான மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக ஐ.நா. பேரவை அறிவிக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் மே 18ஆம் நாள் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும் இனமானமுள்ள தமிழர்களும் தமது துக்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்கிற வகையிலும் இராஜபக்சேவைத் தண்டிக்க வற்புறுத்துகிற வகையிலும் மே 18ஆம் நாள் அறவழியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்

(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக