விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்
விடுதலைச் சிறுத்தைகள் மாநிலச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் 4-6-2011 காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகம்மது யூசுப் முன்னிலை வகித்தனர். உஞ்சை அரசன் வரவேற்புரையாற்றினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் முடிவு குறித்தும், தொடர்ச்சியாக செயல்பட வேண்டிய
களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1. அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், தி.மு.க. உள்ளிட்ட சனநாயக முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2. தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு ஏழை எளிய மக்களுக்காக அறிவித்திருக்கிற இலவச அரிசி வழங்கும் திட்டத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. அத்துடன், தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டசமச்சீர்க் கல்வி உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கான நலத் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென இச்செயற்குழு அ.தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
3. தலித் மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த அனைத்து உழைக்கும் வர்க்கப் பிரிவினரை அமைப்பாக்கி அரசியல்படுத்துவதும் அவர்களை ஆட்சி அதிகார வலிமையுடன்கூடிய அரசியல் சக்தியாக வளர்த்தெடுப்பதும் விடுதலைச்சிறுத்தைகளின் முதன்மையான அரசியல் கடமையாகும். அதற்கானசெயற்களங்களில் தேர்தல் களமும் ஒன்றாகும். அத்தகைய தேர்தல் களத்தில் பெறுகிற வெற்றி மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைப் பயணத்தின் இறுதி இலக்கு அல்ல. உழைக்கும் மக்களின் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் நெடும் பயணத்தில் எட்ட வேண்டிய இறுதி இலக்காகும். எனவே, தேர்தல் களத்தில் சந்திக்கும் வெற்றியும் தோல்வியும் இடைக்கால நிகழ்வுகளே எனக் கருத்தில்கொண்டு எமது கொள்கைப் பயணத்தை வீரியத்தோடு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோம் என இந்தச் மாநிலச் சிறப்புச் செயற்குழு உறுதியேற்கிறது.
4.ஈழத் தமிழர் சிக்கலுக்கு நிலையான ஒரே தீர்வு தமிழீழ விடுதலை மட்டுமே. அதனை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதுடன் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கும் தமிழீழ மக்களைப் பாதுகாப்பதற்கும் ஐ.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் முன்வர வேண்டுமென இச்சிறப்புச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. மேலும், ஈவிரக்கமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராசபக்சேவை போர்க்குற்றவாளியாக மட்டுமின்றி இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டுமெனவும் இச்சிறப்புச் செயற்குழு ஐ.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலை நாளான மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக' அனைத்துலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
5.ஈழத் தமிழர்ச் சிக்கலில் இந்திய அரசு கையாண்டு வருகிற வெளியுறவுக் கொள்கை மற்றும் நடைமுறைகள் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் தொடர்ந்து அவமதிப்பதாகவே இருந்து வருகிறது. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதிலும், தமிழீழ விடுதலைக்கு திராகச் செயல்படுவதிலும் இந்திய அரசின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் மிகவும் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் விளங்கி வருகின்றன. இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து இத்தகைய போக்குகளை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், ஈழத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழீழ விடுதலையை அங்கீகரிக்க வேண்டுமெனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்தச் செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
6. தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் போதிய அடிப்படை வசதிகளும் பராமரிப்பும் இல்லாத அகதிகள் முகாம்களில் அடைபட்டு அல்லல்பட்டு வருகின்றனர். அவர்தம் குழந்தைகளும் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி பயில இயலாத நிலையில் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கின்ற வகையில் அடிப்படை வசதியுடன் கூடிய குடியிருப்பு மற்றும் கல்வியில் முன்னுரிமை போன்றவற்றை வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தச் சிறப்புச் செயற்குழு வலியுறுத்துகிறது.
7. விடுதலைப் புலிகள் என்னும் அய்யத்தின் பெயரில் ஈழத் தமிழ் இளைஞர்கள்
ஏராளமானோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஆகிய சிறப்பு முகாம்களில் விசாரணைகள் ஏதுமின்றி நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் விசாரணைகள் நடத்தாமலும் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கை முடிக்காமலும் வாய்தா என்னும் பெயரில் நீதிமன்றத்திற்கு இழுத்தடிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில் அவர்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று நிபந்தனைகள் ஏதுமின்றி அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
8. கடந்த கால தி.மு.க. ஆட்சிக் காலத்திலிருந்தே தமிழக அரசு நடத்திவரும் மதுக்கடைகளை மூட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை வெகுவாகப் பாதித்து வருகிற அரசின் மது வணிகமானது அடுத்தடுத்து புதிய தலைமுறையினரையும் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்படுத்துகிற சூழலை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களும் இத்தகைய கேடான பழக்கத்திற்கு ஆளாகிவருவது அதிகரித்துள்ளது. எனவே, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. அரசு தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு அரசு மதுக்கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அதே வேளையில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதற்கும் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
9. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கும் முடிவானது, மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தைப் பாழாக்கும் நடவடிக்கையாக அமையும். ஊழல் முறைகேடுகளை விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளையில் திட்டமிட்டவாறு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அக்கட்டடத்தை உரிய முறையில் பயன்படுத்தவும் தமிழக அரசு முன்வரவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. அத்துடன், மெட்ரோ ரயில் திட்டத்தையும் முடக்கி, மக்கள் வரிப்பணத்தைப் பாழாக்காமல் அத்திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
10. தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக முறையான வழிகாட்டுதல் ஏதுமில்லாத நிலையில் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இனி வரும் காலங்களில் தொழிற்கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்கிற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே கல்விக் கட்டணம் தொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கவும் அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக