சட்டப்பேரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசைச் செயல்பட வைக்க அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிவிப்பு!


உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தமிழக அரசு இன்று சட்டப் பேரவையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் மனமார வரவேற்கிறது. ஐ.நா. பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி அரசின் போர்க் குற்றத்தை, குறிப்பாக இராஜபக்சேயின் போர்க்குற்றங்களை அண்மையில் அம்பலப்படுத்தியது. அதனடிப்படையில் இராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசின் இதரப் போர்க் குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என தமிழகத்திலிருந்தும் உலகின் பிற நாடுகளிலிருந்தும் கோரிக்கைக் குரல்கள் எழுந்தன. அத்துடன் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக தலைமையிலான தமிழக அரசும் இக்கோரிக்கையை சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி இந்திய அரசை வற்புறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக அரசு இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது ஆறுதலை அளிப்பதாக அமைந்துள்ளது.

ஆனால், கடந்த காலங்களில் தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு தமிழக அரசின் இந்தத் தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது. ஈழத் தமிழர்கள் தொடர்பாக இதுவரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ, அல்லது சட்டப் பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்லை என்பதுதான் கடந்தகால வரலாறாக உள்ளது. குறிப்பாக ஈழத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத் தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையயல்லாம் சட்டப் பேரவையில் அவைக் குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன. அத்தகைய தீர்மானங்களையயாட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதை நாடறியும். எனவே தற்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசைச் செயல்பட வைக்கிற அளவுக்கு அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது..

இவண்

(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக