யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்

 கடந்த 16.06.2011 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் சிங்களப்படை காடையர்கள் காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் இடத்தில் உள்ள சைவ மகாஜன சபை அரங்கில் நடந்த இக்கூட்டத்தினுள் சிங்களப் படையினர் நுழைந்து "அனுமதி பெற்றிருக்கீர்களா?"  எனக் கேட்டு வன்முறையில் இறங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குறிவைத்து தாக்க முயன்றுள்ளனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மெய்க்காவலர்கள் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையில் சுதர்சன் என்கிற இளைஞர் சிங்களப்படையினரின் வெறித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி சுயநிலையை இழக்கும் அளவில் மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.  ஊடகவியலாளர்களின் படப்பிடிப்பு மற்றும் காட்சிப் பதிவுக் கருவிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சிங்களப் படையினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டத்திலிருந்து ஈழத்தில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை எத்தகைய கொடூரமான நிலையில் அமைந்துள்ளது என்பதை அறியலாம். மக்கள் பிரதிநிதிகளுக்கு பொது இடங்களில் கூட பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிறது. சிங்களக் காடையர்களின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. இந்நிலையில் இந்திய அரசும் தமிழக அரசும் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.


இவண்

                                             




தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக