தலித் இசுலாமியர் அரசியல் எழுச்சிக் கருத்தரங்கம்





விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்புகளான சமூக நல்லிணக்கப் பேரவை, இசுலாமிய சனநாயகப் பேரவை ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து 30.7.11 அன்று மாலை 6 மணியளவில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டட அரங்கில் தலித் இசுலாமியர் அரசியல் எழுச்சிக் கருத்தரங்கை நடத்தின. ‘தனியார் துறைகளில் தலித் மக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றில் தலித் மக்களுக்கும் இசுலாமிய மக்களுக்கும் இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி வாக்காளர் தொகுதி முறையை வழங்கிட வேண்டும், இராஜேந்திர சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் ‘ஆகிய கோரிக்கைகளை மையமாக வைத்து ஒருங்கிணைக்கப்பட்ட இக்கருத்தரங்குக்கு சமூக நல்லிணக்கப் பேரவையின் மாநிலச் செயலாளர் இமாம் சம்சுதீன் தலைமை வகித்தார். இசுலாமிய சனநாயகப் பேரவையின் மாநிலச் செயலாளர் அதிரை இப்ராகிம் வரவேற்புரையாற்றினார். இமயத்தமிழன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெஸ்லான் பாகவி, இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்ரகுமான் ஆகியோர் உரையாற்றினர். 

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், “சாதி, மத உணர்வுகளைக் கடந்து, கொள்கை கோட்பாட்டுப் புரிதலின் அடிப்படையில், ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தலித்துகள், இசுலாமியர்கள் போன்ற அனைத்துச் சிறுபான்மைச் சமூகத்தினரும் ஒருங்கிணைய வேண்டும். சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ ஒன்றுபடுவது இடைக்கால ஒற்றுமையாகவே இருக்கும். கொள்கை அடிப்படையில் ஒன்றுபடுவதுதான் இலக்கை அடைகிற வரையில் நிலையான ஒற்றுமையாக அமையும். ஆகவே, தலித்துகளும் இசுலாமியர்களும் அரசியல் சக்தியாக ஒன்றுபடுவதற்கு ஏற்றவகையில் தொடர்ச்சியான கருத்துப் பரப்புரைகளை மேற்கொள்வோம். அத்துடன் சென்னையில் டிசம்பர் 11ந்தேதி நடைபெறவுள்ள தலித்Šஇசுலாமியர் பேரணியை வெற்றிகரமாக நடத்துவதற்கு உரிய களப்பணிகளை ஆற்றுவோம் என்று மிகுந்த எழுச்சியூட்டும் வகையில் சிறப்புரையாற்றினார்.

நிறைவாக சமூக நல்லிணக்கப் பேரவையின் கடலூர் மாவட்டச் செயலாளர் மருதமுத்து நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் சமூக நல்லிணக்கப் பேரவை மற்றும் இசுலாமிய சனநாயகப் பேரவைப் பொறுப்பாளர்களும் கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்களும் வெகுவாகக் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக