வி.ஏ.ஓ. தேர்வு: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அண்மையில் அதற்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்குரிய 1077 பின்னடைவுக் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை மட்டும் அறிவிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டிருப்பதனால் இந்த அறிவிப்பு செய்யப்படவில்லை. பின்னடைவுக் காலியிடங்களை நிரப்புவதற்கு எதிராக தனியார் ஒருவரால் வழக்குத் தொடுக்கப்பட்டு 7Š02Š2011 அன்று இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அரசின் முடிவுகளுக்கு எதிராக தடையாணை பெறப்படுகிறபோது, வழக்கமாக அத்தகைய தடையாணைகளை உடைப்பதற்கு தொடர்புடைய துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தொடர்புடைய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இடைக்காலத் தடையாணை விதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தவும் இல்லை; அதனை எதிர்த்து வழக்காடவும் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற அ.தி.மு.க. அரசு, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட தவறுகளையயல்லாம் சரிசெய்வதாகவும், மக்களுக்கு நீதி கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துக்கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைக் காண முடிகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் சரியில்லை என்று கூறி அதன் மீது விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளது. சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் பாடத் திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்று குறைகூறி அதனை முடக்கி வைத்துள்ளது.

அதைப் போல, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான கிராம நிர்வாக அலுவலர்களுக்குரிய பின்னடைவுக் காலியிடங்கள் தொடர்பாக பெறப்பட்ட இடைக்காலத் தடையாணையை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர். தி.மு.க. அரசு செய்யத் தவறியதை வேறு விவகாரங்களில் சரி செய்ய முற்படுகிற அ.தி.மு.க. அரசு, இந்த விவகாரத்திலும் சரி செய்ய முயற்சிக்காதது ஏன்? அதாவது நீதிமன்ற இடைக்காலத் தடையாணையை உடைப்பதற்கு தி.மு.க. அரசு தவறிவிட்ட நிலையில் அ.தி.மு.க. அரசு அதனைச் சரி செய்ய முன்வராதது ஏன்?

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்தத் தடையாணையை உடைப்பதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாமே! இன்னும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்?

உடனடியாக இடைக்காலத் தடையாணையை உடைப்பதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்குரிய பின்னடைவுக் காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகளையும் அறிவிக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


இவண்

 (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக