”மரண தண்டனையை முற்றாக ஒழிக்கவேண்டும்! நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கவேண்டும்!” தொல்.திருமாவளவன் அறிக்கை

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணைமனுவைக் குடியரசுத்தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திரு.கே.ஆர்.நாராயணன், திரு.அப்துல் கலாம் ஆகியோர் காலத்தில் நிராகரிக்கப்படாத இந்தக் கருணைமனுக்கள், இந்த நாட்டுக்கே  தாய் எனக் கருத்தத்தக்க ஒருவர் குடியரசுத் தலைவராக இருக்கும் நேரத்தில் நிராகரிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் அவர்களுக்குக் கருணைகாட்டி விடுதலை வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் அவர்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறது.

    குற்றம்  இழைத்த ஒருவருக்கு வழங்கப்படுகிற தண்டனையின்  நோக்கம் அவர் மீண்டும் அந்தக் குற்றத்தைச்  செய்யாமல் தடுப்பது மட்டுமல்ல, அவரைத் திருத்துவதும்தான். தவறு செய்த ஒருவரைப் பழி வாங்குவதற்கும் அவரைத் தண்டிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நமது நீதி அமைப்பு பழி தீர்ப்பதற்கானதல்ல. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதை எந்தவொருநாட்டின் நீதி அமைப்பும் இன்று ஏற்றுக்கொள்வதில்லை. இந்த உண்மையை உணர்ந்ததால்தான் உலகெங்கும் மரண தண்டனை ஒழிப்புக்கான குரல் இப்போது வலுவடைந்து வருகிறது.

    2010 ஆம் ஆண்டு கணக்கின்படி உலகில்  தொண்ணூற்றுஆறு நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மேலும் ஒன்பது நாடுகள் ராணுவ குற்றம் தவிர, சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதில்லை. இவைதவிர மேலும் முப்பத்துநான்கு நாடுகள் மரண தண்டனையைத் தமது சட்டப் புத்தகத்தில் வைத்திருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில்லை. ஆக மொத்தத்தில் உலகில் 139 நாடுகளில் இப்போது மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை.இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக எவரும் தூக்கிலிடப்படவில்லை என்றாலும் மரணதண்டனை வழங்கப்பட்டே வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 105 பேருக்கு இங்கே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

    
1937ஆம்  ஆண்டிலேயே மகாத்மா காந்தியடிகள் மரண  தண்டனைக்கு எதிராகப் பேசியிருக்கிறார். ‘‘மரண  தண்டனை என்பது அகிம்சைக்கு எதிரானதாகும்.  உயிரை உருவாக்கியவர்தான் அதை எடுத்துக்கொள்ள முடியும். அகிம்சையின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் ஒரு அரசு கொலையாளியை மனந்திருந்தச் செய்வதற்கான வழிகளைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றங்கள் என்பவை நோய்களைப் போன்றவை. அதனால் பீடிக்கப்பட்டவர்களை நோயாளிகளாகக் கருதி வைத்தியம் செய்வதே சரியானதாகும்’’ என்று காந்தியடிகள் தெளிவாகக் கூறியிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் மரணதண்டனை கூடாது என்றுதான் வலியுறுத்தினார். ‘‘உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதைவிடவும் மரண தண்டனையை முற்றாக ஒழித்து விடுவதையே நான் ஆதரிப்பேன். இந்தப் பிரச்சனைக்கு அதுதான் சரியானத் தீர்வாக இருக்கும். நமது நாடு அகிம்சையைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட ஒரு நாடாகும். நடைமுறையில் அதை முழுமையாக பின்பற்றாவிட்டாலும்கூட அகிம்சையை இயன்றவரை நாம் பின்பற்றுவதுதான் சரி. அப்படிப்பார்த்தால் மரண தண்டனை என்பதையே முற்றாக ஒழித்துவிடுவதுதான் சரியானதாக இருக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டார். அம்பேத்கரின் கருத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட அரசியல் நிர்ணய சபை மரண தண்டனையை ஒழிப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்யும் அதிகாரத்தை எதிர்கால நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுவது எனத் தீர்மானித்தது.

    சுதந்திரத்துக்குப் பிறகு உருவான இந்திய நாடாளுமன்றத்தில் மரண  தண்டனையை ஒழிப்பதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தே வந்துள்ளன. புகழ்பெற்ற நடிகரும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவருமான பிருதிவிராஜ் கபூர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் இதற்காகத் தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

    அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை  வழங்கப்படும் என்று நமது நீதிமன்றங்கள் கூறி வருகின்றன. ஆனால் இது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. 1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்றத்தில்  வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புகளை ஆராய்ந்த ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பும், மக்கள் சிவில் உரிமைக் கழகமும் (பியுசிஎல்)  இந்தியாவில் வழங்கப்படுகிற மரண தண்டனைகள் அரிதினும் அரிதான வழக்குகளில் அளிக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொரு நீதிபதியும், ஒவ்வொரு கோணத்தில் தண்டனையை வழங்கியிருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியிருக்கின்றன.மரண தண்டனை குறித்த விவரங்களை இந்திய அரசு ரகசியமாகவே வைத்திருக்கிறது எனவும் அவை குற்றம் சாட்டியிருக்கின்றன.

    மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற  குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கும் இந்த  நேரத்தில் சர்வதேச உணர்வுகளுக்கு மாறாக நமது  நாடு நடந்துகொள்வது சரியல்ல. எனவே பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகிய மூவரது மரண தண்டனையை  ரத்து செய்யவேண்டும். மரண தண்டனையை முற்றாக  ஒழிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

  
    இவண்

    (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக