கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து தலைவர் தொல்.திருமாவளவன் ஆறுதல்
13.08.2011 அன்று கடலூர் மாவட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். சிதம்பரம் அருகே உள்ள நடுவண்கரை கிராமத்தில் உள்ளூர் பிரச்சனையால் நேர்ந்த மோதலில் உயிரிழந்த கட்சித் தோழர் பாக்கியராஜ் அவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர், உற்றார் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாக்கியராஜின் திருவுருவபடத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பாக்கியராஜ் மனைவிக்கு ஆறுதல் ரூபாயாக ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை வழங்கினார்.
சேத்தியாதோப்பு அருகேயுள்ள முடிகண்டநல்லூரில் உள்ளூர் சிக்கலால் நேர்ந்த குழு மோதலில் கடந்த 06.08.2011 அன்று படுகொலையான தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார் அவர்களின் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடைய மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் மனைவியிடம் ஆறுதல் ரூபாயாக ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை வழங்கினார். பின்னர் அங்கே திரண்டிருந்த மக்களிடம் சில நிமிடங்கள் உரையாற்றினார்.
புவனகிரியில் சுதாகரன் என்கிற செம்மொழியனின் குழந்தைகளின் காதணி விழாவிலும், ஓவியர் ஜெயசீலனின் கடைத் திறப்பு நிகழ்விலும் கலந்துக்கொண்டார். மேலும் இரட்டைமலை சீனிவாசன் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் பெயர் பலகையினை திறந்து வைத்தார். ஆவண மையத்தின் மாநில துணைச்செயலாளர் தமிழ் ஒளியின் முன்னேற்பாட்டில் கீரப்பாளையம் அருகேயுள்ள ஓரத்தூரில் எழுச்சித்தமிழர் கணினி பயிற்சி மையத்தை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் திறந்துவைத்தார். நிறைவாக நெய்வேலி தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொருளாளர் தேவதாஸ், தொழிலாளர் அணியை சார்ந்த அசோக்குமார் ஆகியோரின் மறைவால் வருந்திக்கொண்டிருக்கும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக