தமிழீழத்தை வென்றெடுக்கவும் ஒருங்கிணைந்து செயலாற்ற உறுதியேற்போம்!


இராஜபக்சேவை அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிக்கவும் 
தமிழீழத்தை வென்றெடுக்கவும் 
ஒருங்கிணைந்து செயலாற்ற உறுதியேற்போம்!

தொல்.திருமாவளவன் மாவீரர் நாள் அறிக்கை

தமிழீழ விடுதலைக் களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களைப் போற்றும் வீரவணக்க நாளாக நவம்பர் 27ஆம் நாள் உலகெங்கும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகெங்கும் வாழ்கிற புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழீழ தேசிய இன எழுச்சி நாளாகவும் இந்நாள் போற்றப்பட்டு வருகிறது.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக அறவழியிலும், ஆயுதப் போராட்ட வழியிலும் தமிழீழ விடுதலைப் போர் தமிழீழ வெகுமக்களின் பங்களிப்போடு உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. ஈழத் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைபெற்ற தமிழீழ விடுதலைக்கான அறப்போராட்டம், சிங்களŠபெளத்த பேரினவாத அரசின் நீண்டகால பயங்கரவாத ஒடுக்குமுறைகளால் ஆயுதம் தாங்கிய புரட்சிகரப் போராட்டமாகப் பரிணாமம் பெற்றது. பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் வன்னிப் பெருநிலப்பரப்பை மையமாகக் கொண்டு தமிழீழ அரசு அமைந்தது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்து, தனித்துப் போரிட வலுவில்லாத சிங்களக் காடையர்கள், இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற பல்வேறு உலக நாடுகளின் ஆதரவோடு கூட்டுப் படையினை அமைத்து, அரச கூட்டுப் பயங்கரவாத ஒடுக்குமுறைகளின் மூலம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது.

அனைத்துலக நாடுகள் முள்ளிவாய்க்காலில் நடத்திய அரச கூட்டுப் பயங்கரவாதத்தினால் இலட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத் தமிழின மக்கள் தாயகம் இல்லாத இனமாக அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அனைத்துலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதும், தமிழீழத் தாயகத்தை வென்றெடுப்பதும்தான் தமிழினத்தின் முன் உள்ள மாபெரும் சவாலாக உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு நடந்தேறும் என்கிற கருத்தும் இன்று உலகத் தமிழர்களிடையே பரவலாக உள்ளது.

எத்தகைய சூழலிலும் மீண்டும் தமிழர்கள் ஒருங்கிணைந்துவிடக் கூடாது என்பதிலும், தமிழீழ விடுதலைப் போராட்டம் மறுபடியும் எந்த ஒரு வடிவத்திலும் துளிர்விடக் கூடாது என்பதிலும் சிங்கள இனவெறியர்கள் மிகவும் கூர்மையாகக் கண்காணித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கையாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவும் உலக நாடுகளின் பார்வைக்கு மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்வதில் சிங்கள இனவெறியர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்போராட்டம் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் என்பதையும் நம்மால் வெற்றிகரமாக நிலைநாட்ட இயலவில்லை. அல்கொய்தா போன்ற இயக்கங்களின் வரிசையில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்து உலக நாடுகள் மதிப்பிடும் நிலை ஏற்பட்டதனால், உலகின் பல்வேறு நாடுகளில் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, அவ்வாறு விதிக்கப்பட்ட தடைகள் இன்னும் நீடிக்கும் நிலையே உள்ளது.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை விலக்கக் கோருவதும், அவ்வியக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கக் கோருவதும் தமிழினத்தின் சவால்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தமிழீழ விடுதலையை நோக்கி நகர்வதுதான் அவ்விடுதலைக் களத்தில் பலியான மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக அமையும்.

தமிழீழம் மட்டுமே தீர்வு என்னும் வேட்கையோடு களப் பலியான அம்மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்குவதற்கு உலகத் தமிழர்கள் யாவரும் ஓரணியில் திரள வேண்டியது இன்றியமையாத இனமானக் கடமையாகவுள்ளது.

எனவே, இனப்படுகொலைக் குற்றவாளியும் போர்க் குற்றவாளியுமான சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் தலைமையிலான காட்டுமிராண்டிக் கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிப்பதற்கும், தமிழீழத்தை வென்றெடுப்பதற்கும், அனைத்துலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதே தமிழினத்தின் முதல் கடமை என்பதை உணர்ந்து ஒருங்கிணைந்து செயலாற்றிட உறுதியேற்போம். அத்தகைய உறுதியினை ஏற்பதற்கு நவம்பர் 27 மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்.

நவம்பர் 27ஆம் நாள், சென்னை, கோயம்பேடு, வீரநங்கை செங்கொடி அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு விடுக்கிறது.

இவண்

(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக