இந்தியக் கடலோரக் காவல்படை இணை இயக்குனரின் தமிழக மீனவர்களுக்கு எதிரான மனுவை திரும்பப் பெற வேண்டும்!


இந்தியக் கடலோரக் காவல்படை இணை இயக்குனரின்  
தமிழக மீனவர்களுக்கு எதிரான மனுவை  
திரும்பப் பெற வேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கை!

கடந்த நவம்பர் 16 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்தியக் கடலோரக் காவல்படையின் இணை இயக்குனர் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் எனவும், இந்தியŠஇலங்கை சர்வதேசக் கடல் எல்லையிலிருந்து 5 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய இலங்கை சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்வது சிங்கள அரசின் இறையாண்மையை பாதிக்கும் செயலென்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கொன்றில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அத்தகைய பாதுகாப்பை வழங்க வேண்டுமென இடைக்கால ஆணை வழங்கியுள்ளது. இந்த ஆணையை எதிர்த்து இந்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்தான் கடலோரக் காவல்படையின் துணை இயக்குனர் இத்தகைய கேடான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் கடந்த காலங்களில் குற்றம்சாட்டி வந்த சிங்கள ஆட்சியாளர்கள், தற்போது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று கூறிவருகிற சூழலிலும் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்; படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்தி வருகின்றனர்; துப்பாக்கிச் சூடு நடத்தி, படுகொலையும் செய்து வருகின்றனர்; ஏராளமான மீனவர்களைக் கைது செய்து சிங்களச் சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்து வருகின்றனர். கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இந்தக் கொடுமைகள் நீடித்து வருகின்றன. இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு, அதற்கு நேர்மாறாக, சிங்களவர்களின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதில்தான் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறதென்பது மிகுந்த வேதனைக்குரியதாகும். கச்சத் தீவினை சிங்களவர்களுக்குத் தாரை வார்த்ததிலிருந்தே தமிழக மீனவர்களால் சுதந்திரமாக மீன் பிடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது பற்றி இது வரையில் இந்திய அரசு கவலைப்படவில்லை. படுகொலையானவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய மறுவாழ்வை அளிக்க இந்திய அரசு முனைப்புக் காட்டவில்லை.

இவ்வாறான நிலையில், மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனத் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் இந்திய அரசு தமிழக மீனவர்களின் நலனுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த மனுவை இந்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். மேலும், தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், இந்திய, சிங்கள அரசுகள் 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்து தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய உடன்பாடு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது..

 (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக