லோக்பால் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் தொல்.திருமாவளவன் உரை
லோக்பால் அமைப்பில் எஸ்சி/எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு முதலில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு விதித்திருக்கும் 50 விழுக்காடு உச்ச எல்லை என்பது எந்தவிதத் தர்க்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. எனவே, ஒடுக்கப்பட்ட பிரிவினர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டு உரிமையைக் கொடுக்க, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்திட வேண்டும். அதற்காகத் தனி சட்டம் ஒன்றை இந்த அரசு இயற்றிட வேண்டும். அது பற்றி விவாதிப்பதற்கு இதுவே உரிய தருணம் என நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
லோக்பால் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே எஸ்சி/எஸ்டி, சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆணையத்தின் தலைவர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். அதற்குரிய சட்டப் பிரிவு இதில் சேர்க்கப்பட வேண்டும்.
லோக்பால் உறுப்பினர் எவரும் சாதி, மத, பாலின பாகுபாடுகளைக் கடைபிடிப்பவர்களாக இருக்கக் கூடாது. அத்தகைய பின்புலம் கொண்டவர்களை இதில் உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது என்கிற சட்டப் பிரிவு ஏற்கப்பட வேண்டும்.
லோக்பால் சட்ட வரம்புக்குள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ப்பது என்ற அரசாங்கத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள 4,30,000 தொண்டு நிறுவனங்களில் 70 விழுக்காடு மத அடிப்படையிலான தொண்டு நிறுவனங்களாகும். அவை வெளிநாட்டு நிதி உதவியைப் பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி பதிவுபெற்ற தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் லோக் பாலின் வரம்புக் கீழே கொண்டுவர வேண்டும். அதற்கான திருத்தம் இதில் செய்யப்பட வேண்டும்.
லோக்பால் வரம்புக்குக் கீழ் தொழில் நிறுவனங்களை உள்ளடக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், அன்னா அசாரேவின் இயக்கத்தில் முக்கியமானவருமான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே இது குறித்து, ஜன் லோக்பால் மசோதாவில் பிரிவு ஒன்றைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அன்னா அசாராவின் குழுவினர் அதை ஏற்கவில்லை. தொழில் நிறுவனங்களை உள்ளடக்காமல் ஊழலை முற்றாக ஒழிக்க முடியாது. எனவே தொழில் நிறுவனங்களை லோக்பால் வரம்புக் கீழ் கொண்டு வருவதற்கான திருத்தம் செய்யப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் சமூகத்தில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. அவை ஏராளமான அதிகாரத்தையும் தமது கையில் வைத்திருக்கின்றன. ஊடகங்களை மேற்பார்வை செய்ய தற்போது வலுவான ஏற்பாடு எதுவும் நம்மிடம் இல்லை. எனவே லோக்பாலின் வரம்புக் கீழ் பெரிய ஊடக நிறுவனங்களையும் உள்ளடக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். மூத்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் இதை வலியுறுத்தியுள்ளனர்.
லோக்பால் மசோதாவில் நீதித்துறை பின்புலம் கொண்டவர்களுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நமது நாட்டில் நீதித்துறையை ஒழுங்கமைக்க அமைப்பு எதுவும் அரசாங்கத்திடமில்லை. பல நேரங்களில் நீதித்துறை முனைப்புவாதம் (Judicial Activism) என்ற பெயரில் சட்டமியற்றும் அமைப்புகளைவிட நீதித்துறை அதிகாரம் கொண்டதாக தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு போன்ற சமூக முக்கியத்துவமுள்ள பிரச்சனைகளில் நீதித்துறை நடந்துகொள்ளும்விதம் இதற்கோர் உதாரணம். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற உயர் அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால் எஸ்ஸி/எஸ்டி, சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. இவ்வாறு போதிய பிரதிநித்துவம் இல்லாத நிலை பல தீர்ப்புகளில் அந்தப் பிரிவினருக்கு எதிரான விதத்தில் இருப்பதைக் காண்கிறோம். எனவே, நீதித்துறை பின்புலம் கொண்டவர்களின் எண்ணிக்கையை மொத்த லோக்பால் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவுக்கு வரையறுக்க வேண்டும் என அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக