விடுதலைச்சிறுத்தைகளின் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்



இயேசு பெருமான் பிறந்த நாளில் 
மனிதநேயம் வளர்க்கவும்  
சமத்துவத்தை நிலைநாட்டவும் உறுதியேற்போம்!

தொல்.திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து!


இயேசு பெருமானின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பெருநாளில் கிறித்தவ மக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

""வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்; இளைப்பாறுதல் தருவேன்'' என்று துன்பத்தாலும் துயரத்தாலும் துவண்டு கிடக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்விற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கக்கூடிய மாமருந்தாய் விளங்குகிற மாமனிதர்தான் இயேசு பெருமான். அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோருக்கு எதிராக போர்க் குரல் எழுப்பிய போராளியாக தமது பொதுவாழ்வைத் தொடங்கிய இயேசு பெருமான், மனிதநேயமே அமைதியான வாழ்வுக்கு அடிப்படை என்பதை உலகுக்கு உணர்த்தினார். அடுத்தவர் மீது அன்பு செலுத்துவதும், கருணை காட்டுவதும், பாவம் செய்தவரை மன்னிப்பதும் போன்ற மனிதநேய அணுகுமுறை மூலம்தான் மானுட வாழ்வில் அமைதியை நிலைநாட்டுவதற்குரிய வழிகள் என்பதைப் போதித்தார்.

மற்றவர் உழைப்பைச் சுரண்ட நினைப்பதும், பகைமையை வளர்ப்பதும், பழிவாங்க நினைப்பதும் அன்பில்லாத வாழ்வையும் அமைதியில்லாத உலகையும் உருவாக்கும் கேடுகளாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆகவேதான் பகைவர்கள் தம்மை சிலுவையில் அறைந்த போதும் அவர்களை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு மனிதனும் அவ்வாறு மன்னிக்கும் உயர்ந்த மாண்பினைப் பெற வேண்டும் என்பதை தனது மரணத்தின் மூலமாக மானுடத்துக்கு உணர்த்தினார். அத்தகைய மாமனிதரின் வழிகாட்டுதலை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட கோடானுகோடி மக்கள் அவரை கடவுளின் தூதராக மட்டுமின்றி கடவுளாகவே ஏற்று வழிபட்டு வருகின்றனர். உலகம் போற்றும் உத்தமர், புனித மகான் இயேசுவின் பிறந்த நாளில் மனிதநேயம் வளர்க்கவும் சமத்துவத்தை நிலைநாட்டவும் உறுதியேற்போம்!.

இவண்

 (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக