எழுச்சித்தமிழரின் மிலாடி நபி திருநாள் வாழ்த்து


உலகமெங்கும் கோடிக்கணக்கான இசுலாமியர்கள் மிலாடி நபி திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில் தமிழகத்தைச் சேர்ந்த இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறைவனின் இறுதித் து£தர் என்று இசுலாமியர்களால் போற்றப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளும், மறைந்த நாளும் ஒரே நாளாக அமைந்து அவரது மகத்தான சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றிடும் சிறப்பைப் பெற்றுள்ளது. மனிதரில் பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது என்றும், வலியவன், எளியவன் என்கிற வேறுபாடு கூடாது என்றும், மானிடர் அனைவரும் சமமாக மதிக்கத்தக்கவர் என்றும் உயரிய சிந்தனைகளை உலகுக்குப் போதித்தவர் நபிகள் நாயகம் ஆவார்.  குறிப்பாக, மனிதனை மனிதன் வணங்குவது ஒருபுறம் ஆணவத்தையும், இன்னொருபுறம் அடிமைத்தனத்தையும் மனிதர்களுக்கிடையில் உருவாக்கும் என்றும் ஆகவே, இறைவன் மட்டுமே மிகப் பெரியவன்; அவனை மட்டுமே மனிதன் வணங்க வேண்டும் என்று மானுட சமத்துவத்திற்கு வழிகாட்டிய மாமனிதர்தான் அண்ணல் நபிகள் நாயகம் ஆவார்.  சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே எளியோருக்காகப் போராட முன்வந்து பொதுவாழ்வில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட நிலையிலும், தன்னை முன்னிறுத்திக்கொள்ளக் கூடாது என்ற தத்துவத்தையும் நடைமுறையில் பின்பற்றி வந்தவர்.  தன்னை முன்னிறுத்துவது தான் என்ற அகந்தையை உருவாக்கும் என்பதோடு அது சமூகத்தின் பிறர் மீதான ஆதிக்க மனநிலையையும் உருவாக்கிடும் என்பதை மானுட சமூகத்திற்கு உணர்த்தியவர்.  அமைதியான வாழ்வும், சமாதானமான சூழலும் உலகெங்கும் நிலைபெற வேண்டும் என்பதே அவருடைய அடிப்படைக் கோட்பாடாகும்.  அத்தகைய சீரிய கோட்பாட்டை வழங்கி என்றும் மானுடத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிற நபிகள் நாயகத்தின் வழியில் அனைவரும் மானுட அமைதிக்காகப் பாடுபடுவோம் என மிலாடி நபி திருநாளில் உறுதியேற்போம்.



மிலாடி நபி, இசுலாமியர்கள் மட்டுமல்லாமல் மானுட சமத்துவத்தையும் சனநாயகத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய திருநாளேயாகும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் இந்த இனிய நாளில் சுட்டிக்காட்டுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக