சங்கரன் கோவில் இடைத்தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிலைப்பாடு - தொல். திருமாவளவன் அறிக்கை
எதிர்வரும் 18-3-2012 அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் (தனித் தொகுதி) சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய, இன்று (20-2-2012) விடுதலைச் சிறுத்தைகளின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகம்மது யூசுப், அமைப்புச் செயலாளர் ஆற்றலரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் கலைவேந்தன், உஞ்சைஅரசன் தலைமை நிலையப் பொறுப்பாளர் இளஞ்சேகுவேரா, மாநிலத் துணைச் செயலாளர் குடந்தை வள்ளுவன், நெல்லை மாவட்டச் செயலாளர் கார்த்திக் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல்கள், சங்கரன் கோவில் தொகுதி நிலைமை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ள சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பதென விடுதலைச் சிறுத்தைகள் முடிவுசெய்கிறது.
2. வழக்கமாக இடைத்தேர்தல்களின்போது, அதிகார அத்துமீறல்களும் முறைகேடுகளும் வெளிப்படையாக அரங்கேறுகின்றன. இதனால் வாக்குகளை விலைபேசும் சனநாயக அவலமும் நிகழ்கிறது. பொதுமக்களையும் ஊழல்மயப்படுத்துகிற போக்குகள் அதிகரிக்கின்றன. அத்துடன், தேர்தல் பணியாற்றுகிற அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கு ஆதரவாக, விரும்பியோ விரும்பாமலோ செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இத்தகைய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் வரையறுக்கப்பட்ட தேர்தல் செலவுக்கான தொகையை ஒவ்வொரு வேட்பாளரிடமிருந்தும் முன்கூட்டியே பெற்றுக்கொண்டு வரையறுக்கப்பட்ட விதிகளின்படி தமது நேரடிப் பொறுப்பில் செலவுகளைச் செய்ய வேண்டும். இதனை ஒரு சோதனை முயற்சியாக சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் கையாள வேண்டுமெனவும், இதனையே பொதுத் தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
3. இடைத் தேர்தல்களின்போது வழக்கமாக ஆளும் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பெரும்பான்மையான அளவிலான அமைச்சர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதோடு ஆட்சி நிர்வாகமும் முடங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அமைச்சர்கள் மற்றும் ஆட்சி அதிகாரப் பதவிகளில் இருப்போர் தேர்தல் பணிகளைச் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தொகுதிகளில் பிரச்சாரப் பணிகளைச் செய்வதற்குத் தடை செய்ய வேண்டும் அல்லது தேர்தல் நடைபெறும் தொகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளை வேட்பாளரின் கணக்கில் சேர்க்க வேண்டும்.
4. சங்கரன் கோவில் இடைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழுவில் அமைப்புச் செயலாளர் பெ. ஆற்றலரசு, துணைப் பொதுச்செயலாளர் மு. கலைவேந்தன் ஆகியோர் மேலிடப் பொறுப்பாளர்களாகவும், நெல்லை மாவட்டச் செயலாளர் கார்த்திக், குடந்தை வள்ளுவன், சண்முகசுந்தரம், குருவிக்குளம் ஒன்றியச் செயலாளர் கனியமுதன், மேலநீலிதநல்லூர் ஒன்றியச் செயலாளர் அன்பழகன், சங்கரன்கோவில் நகரச் செயலாளர் குட்டிவளவன், சங்கரன்கோவில் ஒன்றியச் செயலாளர் அப்துல்ரகுமான், மாவட்டத் துணைச் செயலாளர் பீர் முகைதீன் ஆகியோர் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர்.
5. சங்கரன் கோவில் இடைத்தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில், தேர்தல் முடியும் வரை தொகுதிக்குட்பட்ட அனைத்து மதுக் கடைகளையும் மூடி வைக்க வேண்டும் என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக