தமிழகத்துக்கு புயல் நிவாரண நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில் புயல் பாதிப்பை பார்வையிட்ட
மத்திய குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பும் நிதி ஒதுக்காதது ஏன்?
மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கேள்வி 


கடலூர், பிப்.17-

தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழு அறிக்கை சமர்ப்பித்த பின்னரும் மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்? என்று கடலூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி., கேள்வி எழுப்பினார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்துக்கு புயல் நிவாரண நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் திருமாறன் தலைமை தாங்கினார். இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச்செயலாளர் தாமரை செல்வன், தமிழ்மாறன், அறிவுடைநம்பி, பாவாணன், கெய்க்வாட்பாபு, திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தில் புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய அரசின் நிபுணர்குழுவினர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 3 நாட்கள் தங்கியிருந்தனர். சிதம்பரம் தொகுதிக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டை பகுதி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பகுதிகளை மட்டும் பார்க்க வரவில்லை.

நிதி ஒதுக்காதது ஏன்?

மத்திய குழு ஆய்வு செய்து ஒருமாதத்துக்கு மேலாகிறது, இதுபற்றிய அறிக்கையை சமர்ப்பித்த உடன் மத்திய அரசு நிதியை ஒதுக்கி இருக்க வேண்டும், ஆனால் முதல்கட்டமாக 500 கோடி ஒதுக்கியதோடு சரி, அதன்பிறகு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த 500 கோடி ரூபாய் கடலூர் நகரத்துக்கே போதாது.

மேற்கு வங்கத்தில் புயல் பாதித்த போது அந்த மாநில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை இரண்டு மூன்று நாட்களாக நடத்தவிடவேயில்லை, நிதி ஒதுக்கிய பின்பு தான் நாடாளுமன்றத்தை நடத்த விட்டார்கள். அதேபோல் கேரளாவுக்கு ஒரு பாதிப்பு என்றாலும், அந்த மாநில எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். ஆனால் தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி.க்கள் ஒரு பிரச்சினைக்கும் ஒன்று சேர மாட்டார்கள். இது ஒரு சாபக்கேடு. தமிழகத்தை புயல் தாக்கி இத்தனை நாட்களாகியும், தமிழக எம்.பி.க்களால் இந்திய அரசை வற்புறுத்தி நிதியை பெற முடியவில்லை. காங்கிரஸ், தி.மு.க.வைச்சேர்ந்த மத்திய மந்திரிகள் இருந்தும் இந்த நிலை.

மாற்றாந்தாய் மனப்பான்மை

தமிழக அரசு 5000 கோடி ரூபாய் தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது, ஆனால் மத்திய அரசு இன்னும் அமைதி காத்து வருகிறது. ஏனெனில் தமிழகம் என்றாலே தேசிய கட்சி ஆட்சிக்கு வரமுடியாத மாநிலம் என்று தான் காங்கிரஸ் பார்க்கிறது. மாநில கட்சி ஆளும் மாநிலத்துக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் காங்கிரஸ் பார்க்கிறது, மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தாலும், அதே கண்ணோட்டத்துடன் தான் தமிழகத்தை பார்க்கிறது.

அதனால் தான் முல்லை பெரியாறு பிரச்சினையானாலும், காவிரி பிரச்சினையானாலும், ஈழத்தமிழர் பிரச்சினையானாலும் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு இருக்கிறது. அதனால் தான் இதை கண்டிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். தமிழகம் கோரியபடி 5 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆதவன், ஸ்ரீதர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு இழப்பீடாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையிலேயே பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளது. இழப்பீடு தொகையை உயர்த்தும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் தமிழக அரசின் திட்டத்தையும், கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதையும் வரவேற்கிறேன். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதை வருகிற 1-ந்தேதி கூடும் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம். இதுவரை எங்கள் ஆதரவைக்கேட்டு எந்த கட்சியும் எங்களை அணுகவில்லை.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக