அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்திய ஆதரவு அளிக்க வேண்டும்!
ராஜபக்ஷே கும்பலுக்கு சர்வதேச நீதிமன்ற நடவடிக்கை
கோரி 10 லட்சம் பேரிடம் வி.சி.க.பெற்ற கையொப்பப் படிவங்கள் ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டன.
அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்திய ஆதரவு அளிக்க வேண்டும்!
- தொல். திருமா அறிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அவை கூட்டம் பிப்ரவரி 27 அன்று ஜெனிவாவில் தொடங்கியுள்ளது. இக்கூட்டத் தொடரில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை முன்மொழிவதற்கு அமெரிக்க வல்லரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதாவது, ஈழத்தில் முள்ளிவாய்க்கால் போரின்போது சிங்கள அரசு மனித உரிமைகளை மீறி செயல்பட்டிருப்பதனால், சிங்கள அரசு மீது ஐக்கிய நாடுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாகவே அமெரிக்க வல்லரசு அத்தீர்மானத்தைக் கொண்டு வருகிறது.
இதற்கு ஆதரவாக உலக நாடுகள் குரல்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 5 வரையில் ஜெனிவாவை நோக்கி தொடர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. நிறைவாக மார்ச் 5, 2012 அன்று ஜெனிவாவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் தீர்மானத்துள்ளது.
இக்கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கடந்த சூலை 12, 2011 முதல் ஆகஸ்டு 31, 2011 வரையில் நடத்திய கையொப்ப இயக்கத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 10 இலட்சம் கையொப்பங்களைக் கொண்ட படிவங்கள் ஐ.நா. பேரவைக்கான மனித உரிமைகள் உயர் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கு 28-2-2012 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியப் பேரரசு வழக்கம்போல சிங்கள இனவெறியர்களுக்குத் துணைபோகாமல், ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு ஆளாகியுள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சிங்கள இனவெறிய அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழியவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
தங்களுக்கு ஆதரவாகவே இந்திய அரசு செயல்படும் என்று சிங்கள அமைச்சர் ஒருவர் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு உள்ளது என்பதனை இந்தத் தகவலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஈழத் தமிழர்களை அழித்தொழித்தாலும், தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றாலும் இந்திய அரசு தொடர்ந்து சிங்கள இனவெறியர்களுக்கு உற்ற துணையாய்ச் செயல்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையிலும், தங்களுக்கு ஆதரவாகவே இந்திய அரசு செயல்படும் என்று சிங்கள அமைச்சர் உறுதியளித்திருப்பது, அமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தின் மீது இந்தியாவின் நிலைப்பாடு குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது.
நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் இந்திய அரசு, வழக்கம் போல தமிழர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது என்றும் சிங்கள அரசுக்கு எதிரான அமெரிக்காவின் முன்முயற்சிக்கு இந்திய அரசு ஒத்துழைப்புநல்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
மேலும், ஜெனிவாவில் நடைபெறவுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் உலகமெங்கும் பரந்து வாழக்கூடிய தமிழ்ச் சொந்தங்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதன்மூலம்தான் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை போன்ற மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள இராஜபக்சே தலைமையிலான கும்பலை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்குட்படுத்த முடியும். குறைந்தது 24 நாடுகளின் ஆதரவைப் பெறுவதன் மூலமே அமெரிக்கா முன்மொழியவுள்ள தீர்மானத்தை நிறைவேற்ற இயலும். இந்நிலையில், சர்வதேசச் சமூகத்தின் ஆதரவை வென்றெடுக்கும் வகையில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒன்றுசேர்ந்து செயலாற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக