5-3-2012 விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் - தொல்.திருமா அறிக்கை

சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி மார்ச் 5ந் தேதி சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளின் பேரவைக் கூட்டம் கடந்த 27-2-2012 அன்று ஜெனிவாவில் கூடியுள்ளது.  இக்கூட்டம் வழக்கத்திற்கு மாறாக, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சிறப்பைப் பெற்றுள்ளது.  அதாவது முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் ஐ.நா. பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், இராஜபக்சே கும்பலின் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டினை தீர்மானமாக முன்மொழிவதில் அமெரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் முனைப்பாக உள்ளன.   இதனால் நிலை கலங்கிப்போயிருக்கும் சிங்கள இனவெறியர்கள் தங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அறிவித்துள்ளனர்.  ஏற்கனவே நடந்த சிங்கள அரசுக்கு எதிரான இத்தகைய முயற்சியை இந்தியா, சீனா, கியூபா போன்ற நாடுகள் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு முறியடித்துள்ளன.  இது ஈழத்தமிழர்களுக்கும், ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் இந்திய அரசு இழைத்துள்ள மாபெரும் துரோகமாகும்.  

தற்போது, மீண்டும் இந்திய அரசு தமிழினத்திற்குத் துரோகம் இழைப்பதைக் கைவிட வேண்டும்.  மாறாக, நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.  
தீர்மானத்திற்கு ஆதரவளிக்க இந்திய அரசை வலியுறுத்துகிற வகையிலும், தீர்மானத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைக் கோரி வருகிற 5-3-2012 அன்று ஜெனிவாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடத்தும் பேரணியை ஆதரிக்கிற வகையிலும், அதே நாளில் (5-3-2012) விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பு காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  எனது தலைமையில் (தொல்.திருமாவளவன்) நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1 கருத்துகள்:

சாதியத்திற்கு எதிராகவும்...
ஈழ விடுதலை உணர்வோடும்...
சு.நிலவன் தோட்டப்பட்டு

4 மார்ச், 2012 அன்று 8:15 AM comment-delete

கருத்துரையிடுக