காவியக் கவிஞர் வாலி மரணம் : தொல்.திருமாவளவன் இரங்கல்

காவியக் கவிஞர் வாலி காலமாகிவிட்டார் என்பது திரையுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும். கடந்த அறுபது ஆண்டு காலமாக திரையுலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் நிலைத்து நின்று பெரும் புகழ்பெற்ற பேராண்மையாளராக விளங்கிய வாலி அவர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.  எனது ஐம்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது நடைபெற்ற கவியரங்கத்திற்குத் தலைமையேற்று கவிதைபாடி எனக்குப் பெருமை சேர்த்தார்.  நெஞ்சோடு அணைத்து என்னை நெகிழ வைத்தார்.  அந்த நினைவுகள் என்றும் மறக்க இயலாதவை. அவரது மறைவால் என் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற ஒரு வெறுமையை உணர்கிறேன்.  அந்த அளவுக்கு அவர் என் மீது காட்டிய வாஞ்சை என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துள்ளது.

அவருடைய இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழினத்துக்கே பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் திரை உலகத்தினருக்கும் இலக்கிய உலகத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  வாலிபக் கவிஞர் வாலி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக