சிறுதாவூர் நிலம்: தொல்.திருமாவளவன் அறிக்கை
சிறுதாவூர் நிலம்:
நீதியரசர் சிவசுப்பிரமணியம் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறோம்
தொல்.திருமாவளவன் அறிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள சிறுதாவூர் என்னும் ஊரிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் வசித்துவரும் ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் உழுவதற்கு நிலமும் குடியிருப்பதற்கு வீட்டு மனையும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அந்நிலங்களை உழுது பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில், கலப்பை மற்றும் மாடுகள் வாங்குவதற்கும் நிதி உதவி செய்யப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் தாழ்த்தப்பட்டோரைத் தவிர வேறு எவரும் விலைக்கு வாங்கக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறுதாவூரில் கட்டியுள்ள அரண்மனை தொடர்பாக பெரும் விவாதம் எழுந்தது. அதனையொட்டி பல்வேறு அமைப்புகளாலும் அரசியல் கட்சியினராலும் அடுக்கடுக்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நிலங்களுக்குரிய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திட்டமிட்ட மோசடிக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தலித் அமைப்புகள், இடதுசாரிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு தரப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இவற்றின் விளைவாக, தமிழக அரசு, நீதியரசர் சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் தீவிரமாக இயங்கி, தொடர்புடைய தனி நபர்களையும் நிறுவனங்களையும் விசாரித்தது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஓர் நீண்ட நெடிய அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை 13.5.2010 அன்று சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் யாவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் இருந்து சட்டவிரோதமாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.
மேலும், அந்நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் கையகப்படுத்தப்படும் அந்த நிலங்களை விற்பனை செய்த தாழ்த்தப்பட்டோருக்கே திருப்பி வழங்கக்கூடாது எனவும் பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையத்தின் இந்தப் பரிந்துரைகளை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கிறது. அத்துடன் தமிழகமெங்கிலும் இவ்வாறு தாழ்த்தப்பட்டோருக்கான நிலங்களை, குறிப்பாக, பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மீட்டு உரிய மக்களிடம் ஒப்படை செய்வதற்கு தமிழக அரசு தனி விசாரணை ஆணையம் ஒன்றை உடனடியாக அமைத்திட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும், மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென, வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென தமிழக அரசை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
(தொல்.திருமாவளவன்)
1 கருத்துகள்:
Your support alway required for us,
i am appricating your party policy.
கருத்துரையிடுக