இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும்!

கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்களின் 115ஆம் பிறந்த நாள்
இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவரும்
அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும்!
தொல். திருமாவளவன் அழைப்பு!

கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ஆம் பிறந்த நாளில் (சூன் 5, 2010) இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இசுலாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த சனநாயகச் சிந்தனையாளராவார். அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அதாவது, இந்துŠமுஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர். அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும். கண்ணியத் தமிழரின் சனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம்.

திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள காயிதே மில்லத் அவர்களின் நினைவிடத்தில் சூன் 5, காலை 10 மணியளவில் மலர்ப் போர்வை அணிவித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகளும் இசுலாமியப் பெருமக்களுக்கும் பெருந்திரளாக அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக