செம்மொழி மாநாட்டையொட்டி திருமா கோரிக்கை

செம்மொழி மாநாட்டையொட்டி
....................................................................................................................................................................
  • தமிழை வழக்கு மொழியாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
  • நளினி மற்றும் இசுலாமியத் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும்!
  • சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் விளம்பரப் பலகைகளை தமிழில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!



தொல். திருமாவளவன் வேண்டுகோள்!
....................................................................................................................................................................



தாய்த்தமிழை வழக்குமொழியாக்கிட வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சாகும்வரை உண்ணாவிரத அறப்போர் நடத்தி வருகின்றனர். அவர்கள் தமது அறப்போராட்டத்தை கடந்த சில நாட்களாக சிறைச்சாலையிலும் தொடர்ந்து வருகின்றனர். அவர்களின் உடல்நலம் நாளுக்கு நாள் மிக மோசமாக நலிவடைந்து வருகிறது. ஓரிருவர் மயக்கமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென தமிழகச் சட்டப் பேரவையில் மூன்றாண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பாக இந்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. இந்நிலையில்தான் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டுமென வற்புறுத்தி தமது உயிரைப் பணயம் வைத்து களமிறங்கியுள்ளனர்.

இளமையும் மூப்பும் புதுமையும் பழமையும் ஒருங்கே பெற்ற உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு உலகரங்கில் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் அளப்பரிய முயற்சியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து சற்றொப்ப நான்காயிரம் தமிழறிஞர்கள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாடு நடைபெறும் சூழலில் தாய்த் தமிழை வழக்குமொழியாக்க அங்கீகரிக்க வலியுறுத்தி நடைபெறும் உண்ணா நிலை அறப்போராட்டத்தால் போராடும் வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற அச்சமே தற்போது மேலெழுகிறது.

எனவே சிறைப்படுத்தப்பட்டுள்ள மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் இந்திய அரசை வற்புறுத்தி அன்னைத் தமிழை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மற்றும் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டுமென தமிழக அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. அவ்வாறு செம்மொழியாம் தமிழ்மொழியை வழக்கு மொழியாக வென்றெடுப்பது கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றியாக அமையும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமது சாதனைப் பட்டியல் வரிசையில் தமிழ்மொழியை வழக்குமொழியாக்கிய சாதனையையும் இணைத்துக்கொள்ளும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இம்மாநாட்டையயாட்டி தண்டனைக் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு சிறைவாசிகளிடையே உருவாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் நீண்டகாலமாக விசாரணை இல்லாமல் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களையும், ஆயுள் காலத் தண்டனைக் காலத்தையும் தாண்டி சிறைப்பட்டிருக்கும் நளினி அவர்களையும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளான இசுலாமிய இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

செம்மொழி மாநாட்டையயாட்டி சென்னை பெருநகரத்தில் கடைகளில் விளம்பரப் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டுமென சென்னை பெருநகர மேயர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. ஆனாலும், அந்த அறிவிப்புக்கு மதிப்பளித்து விளம்பரப் பலகைகள் முழுவதுமாக இன்னும் தமிழில் எழுதப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. தமிழில் மாற்றி எழுதுபவர்களும் சொற்களை மாற்றாமல் பிறமொழிச் சொற்களை தமிழ் எழுத்துகளாக மட்டுமே மாற்றியுள்ளனர். இது மேலும் அன்னைத் தமிழை அவமதிக்கும் செயலாகும். எனவே எழுத்து மாற்றமாக அமையாமல் சொற்கள் மாற்றமாக அமையும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், சென்னை பெருநகரத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவில் இதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழகத்தின் எல்லைப் புற மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகள் போன்ற யாவற்றிலும் தமிழ் அல்லாத பிற மொழி ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. குறிப்பாக, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்தையும் புறக்கணித்து விட்டு கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதும் போக்கு நிலையாக உள்ளது. இவற்றையும் சீர்ப்படுத்த வேண்டியது செம்மொழி மாநாடு நடைபெறும் இச்சூழலில் சுட்டிக்காட்ட வேண்டியதாக அமைந்துள்ளது. ஆகவே, இது தொடர்பாகவும் தமிழக அரசு உறுதிமிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகம் தழுவிய அளவில் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் யாவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் மகத்தான முயற்சி வெற்றி பெறுமாறு கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக