`தமிழக மழை சேதத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும்' சென்னையில் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
சென்னை, டிச.8-
தமிழக மழை சேதத்திற்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச்சேதத்தை சரிசெய்ய, முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் இரா.செல்வம், பாலாஜி, மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொடர் மழை
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 30 ஆயிரம் வீடுகள் நாசமடைந்துள்ளது. 25 ஆயிரம் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளும், சுமார் 200 பேரும் பலியாகியுள்ளனர்.
வெள்ளம் பாதித்த இந்த சூழ்நிலையில், இந்திய அரசு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும். மேலும், வெள்ளச் சேதத்தை கணக்கிட மத்திய மந்திரி தலைமையிலான ஆய்வு குழுவையும் உடனே தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
வெள்ள பாதிப்பு
பொதுவாக இயற்கை பேரிடர் நிவாரண நிதி 75 சதவீதம் வழங்க வேண்டும் என்ற விதி முறை உள்ளது. ஆனால், மத்திய அரசு 10 சதவீதம் வரைதான் வழங்கி வருகிறது. எனவே, நிவாரண நிதியை உயர்த்தி தர வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால், வீராணம், கொள்ளிடம் போன்ற ஏரிக்கரைகளை உயர்த்த வேண்டும். தமிழக உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் 9 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, தாழ்த்தப்பட்டோர் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை என்று தகவல்கள் வருகின்றன. எனவே, தாழ்த்தப்பட்டவர்கள் பெயரையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக