தமிழர் இறையாண்மை மாநாடு - தீர்மானங்கள்
இன்று (26-12-2010) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு எழுச்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக விடுதலைச் சிறுத்தைகளின் ”தமிழர் இறையாண்மை மாநாடு” நடந்துகொண்டு வருகிறது. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட
சிறுத்தைகள் திரண்டுள்ளனர்.
மாநாட்டில் முன்வைக்கப்பட்ட - தீர்மானங்கள்
1.வீரவணக்கம்
அன்னைத் தமிழையும் அருந்தமிழ் இனத்தையும் ஆதித்தமிழ் மண்ணையும் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும், முதல் மொழிப்போர் தொடங்கிய காலமான 1938 இலிருந்து இதுவரையிலும் தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளெங்கிலும் அரசியல், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பாடாற்றித் தம்வாழ்வை ஈகம் செய்த அனைத்துச் சான்றோருக்கும், அற வழியிலும் ஆயுத வழியிலும் போராடி களப்பலியான தமிழகத்தைச் சார்ந்த கரும்புலி முத்துக்குமார் உள்ளிட்ட போராளிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போரில் உயிரீந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
அத்துடன், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், போன்ற மாமனிதர்களின் மகத்தான கொள்கை வழியில், தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் தீண்டாமை உள்ளிட்ட இந்துத்துவ வன் கொடுமைகளை எதிர்த்து, சாதி ஒழிப்புக் களத்தில் போராடிக் களப்பலியான சாதி ஒழிப்புப் போராளிகள் அனைவருக்கும் இம்மாநாட்டில் திரண்டிருக்கும் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று நடந்த ஆழிப்பேரலையின் தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் இந்நேரத்தில் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
2.இறையாண்மையை வென்றெடுப்போம்
உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் அல்லது மதவழி தேசியத்தின் அடிப்படையில் தமக்கான நாடு மற்றும் அரசை உருவாக்கி தம்மைத்தாமே ஆட்சி செய்து கொள்ளும் இறையாண்மையைப் பெற்றுள்ளது. மேலும் பல தேசிய இனங்கள் புதிது புதிதான தேசங்களையும், அரசுகளையும் உருவாக்கி தத்தமது இறையாண்மையென்னும் தன்னாட்சி உரிமைகளை வென்றெடுத்து வருகின்றன. இந்நிலையில் உலகமெங்கும் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் தொகையைக்கொண்ட உலகின் மூத்தக்குடியும் முதல் குடியுமான தமிழ்க்குடி மக்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலர வேண்டுமென்றும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதமில்லா அறவழியிலும் ஆயுதமேந்திய அறவழியிலும் தமிழீழ விடுதலைப்போர் நடந்து வருகிறது. அப்போர், தற்போதைய சூழலில் இடைக்காலமாக ஒரு பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அது முற்றும் முழுதாக முடிந்து விட்ட ஒன்றல்ல! ஏனெனில், அது வெறும் மண்மீட்புப்போர் அல்ல ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை மீட்சிக்கான போர் ! ஏற்கனவே நாடு, அரசு, ஆட்சி என்னும் கட்டமைப்புக்களைக் கொண்ட இறையாண்மையையுடைய ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம், இழந்து போன இறையாண்மையை வென்றெடுக்கவே இன்று இந்த விடுதலைப் போரை நடத்தி வருகிறது.
எனவே தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றத் தேவைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை, அனைத்துலகச் சமூகம் முதலில் கொள்கையளவில் இசைந்தேற்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! ஆயுதப்போராட்ட வடிவம் அங்கே இடைக்காலமாக அழித்தொழிக்கப்பட்டாலும், விடுதலைப்போரட்டத்திற்கான தேவைகளும் காரணங்களும் அழித்தொழிக்க முடியாதவைகளாக உள்ளன. எனவே, இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3.ஈழத் தமிழர்களின் இறையாண்மை
50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து அனைத்து வழிகளிலும் போராடித் தனித் தமிழ் ஈழ அரசை நடத்தி வந்த ஈழத்தமிழர்களின் இறையாண்மையினையும், அதன் வெளிப்பாடான தமிழ் ஈழ அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க தவறிவிட்டன.
வல்லரசிய நலன்களைக் கருத்தில்கொண்டு, உலக நாடுகளால் ஈழ அரசு அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது என்பது அய்.நா.பேரவை தேசிய இனங்களுக்கு வழங்கியுள்ள அரசியல் பாதுகாப்பை மீறிய செயலாகும். உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 38 நாடுகளை, உறுப்பு நாடுகளாக அய்.நா.பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 14 தீவு நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக அய்.நா.பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்தி அய்.நா.பேரவைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு தமிழக மற்றும் இந்தியஅரசுகளுக்கும், உலகத்தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.
4.சிங்களமயப்படுத்தும் போக்கிற்கு கண்டணம்
தமிழீழ மக்களின் பூர்வீகத்தாயகமான இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளில், நிலையான சிங்களப்படை முகாம்களை நிறுவியும், படையினரின் குடும்பத்தினர் என்ற பெயரில் சிங்களர்களை வெகுவாக குடியேற்றம் செய்தும், ஊர்கள், நகரங்கள், வீதிகள், என யாவற்றின் தமிழ்ப்பெயர்களையும் அகற்றி சிங்களப்பெயர்களைச் சூட்டியும், ஒட்டு மொத்த தமிழீழத்தையும் சிங்கள-பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் சிங்கள இன வெறியர்கள்! தமிழீழத்தை ஆக்கிரமிக்கும் இந்தக் கொடூரப்போக்கைத் தடுத்து நிறுத்தவும் அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை மற்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் உடனடியாக முன்வரவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
5.போர்க்குற்றங்களின் மீது விசாரணை
நாடுகளுக்கிடையில் நடக்கும் போர்களாக இருந்தாலும் ஒரு நாட்டுக்குள்ளேயே நடக்கும் உள்நாட்டுப்போர்களாக இருந்தாலும், அப்போரின் போது எத்தகைய மரபுகளை அல்லது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அனைத்துலக நாடுகளுக்கிடையே சில வரையறைகள் உள்ளன. பள்ளிகள் வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீதும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், நோயாளிகள் போன்றவர்களின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பதும், பொதுமக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் சதிநோக்கில் அதிஉயர் நச்சுவகைப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதும், உயிருடன் பிடிபடும் போராளிகளைக் கையாளுவதாக இருந்தாலும் போராளிகளின் இறந்த உடல்களைக் கையாளுவதாக இருந்தாலும் மனித உரிமைகளை மீறக்கூடாது என்பதும் போர்க்களத்தில் பின்பற்ற வேண்டிய மரபுகளாகும்.
ஆனால், அத்தகைய போர்மரபுகள் எதனையும் மதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக ஈவிரக்கமில்லாமல் இலட்சக்கணக்கானத் தமிழர்களைக் கொன்று குவித்த இராஜபக்சேவையும் இராஜபக்சேவின் சகோதரர்களையும், இன்னும் பிற சிங்கள இனவெறிக் கும்பலையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து அனைத்துலக நீதிமன்றத்தின் போர்க்குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கிட அய்.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
6.போர்க்கைதிகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளையும், புலிகள் என்ற அய்யத்தின் பெயரில் அப்பாவி இளைஞர் மற்றும் இளம்பெண்களையும் போர்க்கைதிகளாகக் கைது செய்து இருட்டுச் சிறைகளில் அடைத்து விசாரணைகள் ஏதுமின்றி மாந்தநேயமற்ற முறையில் சொல்லொணாக் கொடுமைகளை சிங்கள இன வெறி அரசு ஒவ்வொரு நாளும் அரங்கேற்றி வருகிறது.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அரசப்பயங்கரவாதப் போக்கைத்தடுத்து நிறுத்தி, இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் சட்டப்பூர்வமாக விசாரிக்கவும், போர்க்கைதிகளுக்கான மனித உரிமைகளைப்பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
7.அகதிகள் மறுவாழ்வு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 இலட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து விடுவிக்கப்பட்ட மக்களும் கூட தமது சொந்த வாழிடங்களை இழந்து விட்டதுடன், உடைமைகள் மற்றும் உடனுறை உயிர்களையும் பறிகொடுத்ததனால் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அம்மக்களுக்கு மீள்வாழ்வு அளிக்கும் வகையில் 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான" பணிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
8. அய்.நா பேரவை அகதிகள் நல ஆவணத்தில் கைச்சாத்து
தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை, கொத்தடிமைகளின் வாழ்க்கையை விட மிகுந்த வேதனைக்குரியதாகவுள்ளது. தங்குமிடம், குடிநீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இன்றி அல்லல்படும் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறைகளும் அகதிகளுக்கான அய்.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திடாத நிலைப்பாடுமே காரணங்களாகும். எனவே, இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதுடன், அகதிகளுக்கான அய்.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.
9.தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடை நீக்கம்
ஈழத்தமிழினத்தின் ஒற்றைப் பாதுகாவல் அரணாகவும் ஆயுதமாகவும் விளங்குகிற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மகத்தான விடுதலை இயக்கமாகும். வெகுமக்களின் பேராதரவோடும் பங்களிப்போடும் ஆட்சி நிர்வாகக் கூட்டமைப்புடன் கூடிய ஒரு தனி அரசையே நிறுவி, ஆட்சி நடத்திய ஒரு பேரியக்கமாகும். ஆனால், அமெரிக்க வல்லரசின் ஒருங்கிணைப்பில் அனைத்துலகப் பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தி, அவ்வியக்கத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. போர்மரபுகளை மீறாமல், சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தாமல் சிங்களப்படையினரோடு மட்டுமே போர் நடத்திய-நடத்தி வருகிற தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு வெகுமக்கள் இயக்கமாக இசைந்தேற்பு செய்து, அதன் மீதான அனைத்துலகத் தடைகளை நீக்க வேண்டுமென்று, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
10.அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோரின் விடுதலை
இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்குரிய சராசரி கால அளவையும் தாண்டி, ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட அனைத்து தண்டனைக் கைதிகளையும், கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இன்னபிற வழக்குகளிலும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து வரும் இசுலாமியர் உள்ளிட்ட தண்டனைக்கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகிறது. அத்துடன், எந்த விசாரணையுமில்லாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைச்சிறையில் சிக்கி வாடும் தமிழக, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியர்களை இந்திய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, அனைவரையும் உடனே இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
11.தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கட்சத் தீவு மீட்பு
தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தாலும், இந்திய கடலோர பாதுகாப்புப் படையினராலும் கடல் எல்லை பாதுகாப்பு எனும் பெயரில் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் தொடர்கதையாகி வருகிறது. கடல் வளத்தில் மீனவர்களுக்குள்ள இயற்கையான உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய கூட்டரசின் கடல்சார் சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்கள் உடனடியாக திரும்பப்பட பெறவேண்டும்.
மேலும் சர்வதேச கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். தென்தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்தியக் கூட்டரசு பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய இலங்கைக்கு இடையே ஏற்படுத்திக்கொண்டு ஒப்பந்தம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் - இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டு, கச்சத்தீவு தமிழக எல்லைக்கு மீட்டுத்தர வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
12.இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு அங்கீகாரம்
இந்தியா என்பது ஆங்கிலேயர்களின் சுரண்டலுக்கு வசதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்பேயாகும். வெள்ளையனால் உருவாக்கப்பட்ட இன்றைய இந்தியாவில், தேசிய இன உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. அதன் அடையாளமாகவே இங்கு மொழிவழி மாநிலங்கள் 1956 இல் உருவாக்கப்பட்டன. அதாவது தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதால், இவ்வாறு மொழிவழி மாநிலப் பிரிவினைகள் தோன்றின ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான மொழி, இன உரிமைகளும், மண்ணுரிமை, கனிமவள உரிமை, ஆற்றுநீர் உரிமை, போன்ற பிற உரிமைகளும் இங்கே இன்னும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன. இவ்வாறான நிலையில், தேசிய இனங்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மையுள்ள தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் முழுஅதிகாரம் பெற்ற மாநில அரசுகளைக்கொண்ட கூட்டரசாக இந்திய அரசு அமைந்திட மையத்தில் கூட்டாட்சி முறையைக் கொண்டு வர வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு முன் மொழிகிறது.
13.மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்
மத்திய - மாநில பொதுப் பட்டியலில் உள்ளடக்கப் பட்டுள்ள அதிகாரங்கள் தவிர ஏனையவை குறித்து சட்டமியற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்கே அரசமைப்புச் சட்;டம் வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தை மாநில அரசின் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் குறிப்பாக, இத்தகைய இனங்களின் மீது வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மாநாடு வலியுறுத்துகிறது. தற்போது திரட்டப்படும் மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு எழுபத்தைந்து விழுக்காடு வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
14.மாநிலங்களின் அரசு கொடி
ஆகத்து -15 இந்திய விடுதலை நாள் மற்றும் சனவரி26, இந்தியக் குடியரசு நாளில் இந்திய தேசியக் கொடியுடன் மாநிலத்தின் கொடியை தலைமைச்செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்றி வைத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
15.கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உரிமை
ஒவ்வொரு மாநில எல்லைகளுக்கும் உள்ள கனிம வளங்கள் மீதுள்ள உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே உரிய உயிராதார உரிமையாகும். இத்தகைய கனிம வளங்கள் மீது மாநிலங்கள் பயன்பெற வேண்டுமெனில், இந்தியக் கூட்டரசு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அதற்கான வருவாயை மாநில அரசுகளே பயன்படுத்திக்கொள்ளவும் வகை செய்யப்பட வேண்டும்.
இதற்கு ஏதுவாக இந்தியக்கூட்டரசு கனிம வளங்களின் மீது செலுத்தும் மேலாண்மையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, கனிம வளங்கள் மேலாண்மையை மாநில அரசுகளின் அதிகாரப்பட்டியலுக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுத்துகிறது.
16.மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி
மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசு மாநிலங்களின் உணர்வை மதிக்காமல் உயர்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி தொடர்பான அதிகாரங்களை மத்தியில் குவித்துக்கொள்ளும் நோக்கோடு உருவாக்கியிருக்கும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி தொடர்பான அமைப்புகளைக் கலைத்திட வேண்டும் என இம்மாநாடு வலியுத்துகிறது.
17.தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை
நூல்களின் அச்சு, விநியோகம் உள்ளிட்டவற்றை மேலாண்மை செய்யும் வகை யில் தற்போது மத்திய அரசு உருவாக்கியிருக்கும் தேசிய புத்தக ஆதரவுக்கொள்கை (யேவழையெட டீழழமள Pசழஅழவழைn Pழடiஉல) மாநில உரிமைகளைப் பறிக்கும் நிலையில் இருப்பதால் அதைக்கைவிட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. அதற்கு பதிலாக அந்தக் கொள்கையை மாநில அரசே உருவாக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
18.தேசிய புலனாய்வு நிறுவனம் கலைக்கப்பட வேண்டும்
தேசிய புலனாய்வு நிறுவனம் என்ற அமைப்பு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநில காவல்துறை தொடர்பான உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே இந்த அமைப்பை கலைத்திட வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
19.வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் மாநிலங்களின் நலன்
மத்திய அரசு வெளியுறவுக்கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் போதும் அண்டை நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் போதும் சம்பந்த்தப்பட்ட மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களின் உரிமைகள் தொடர்புடையவையாக இருந்தால் அந்த தேசிய இனத்தைச் சார்ந்த மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு மட்டுமின்றி அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறக்கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
20.வெளிநாடுகளில் தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள்
கடல் கடந்து திரவியம் தேடல் என்பது தமிழர்களின் பொருளாதார வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அம்சமாக இருந்து வருகிறது. எனவே தான் கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் இன்றும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது எழுந்துள்ள பொருளாதார மாற்றங்களினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் பாதுகாப்பாக தங்கி பணிபுரியவில்லை என்ற செய்திகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன.
அப்படி சென்ற அவர்கள் அந்நிய நாட்டில் பணிகளை இழந்து, உயிருக்கும் பாதுகாப்பின்றி இருக்கின்ற நிலையில் அந்நிய நாடுகளில் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்திய தூதரகங்கள்தான். ஆனால் கெடு வாய்ப்பாக இந்திய தூதரகங்கள் வெளிநாடுவாழ் - பணிபுரியும் தமிழர்களுக்கு சரிவர உதவுவதில்லை என்பதுடன், தமிழர்களிடம் பாராமுகமாய் பொறுப்பற்று நடந்து கொள்கின்றன என்கின்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வருகின்றன.
இதற்கு காரணம் அந்த தூதரகங்களில் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர்கள் பணிபுரிவது தான். மொழி வேற்றுமைகளால் அவர்கள் இப்படி கடுமையாக நடந்து கொள்வதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வெளிநாடுவாழ் மற்றும் பணிபுரியும் தமிழர்களின் நலனைக் காக்கும் வகையில் தமிழர்கள் பெரும்பான்மையாக பணி செய்யும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள் பெருமளவில் நியமிக்கப்பட வேண்டும் என இந்த மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
மேலும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று பொய்;யான வாக்குறுதிகளை அளித்து இளைஞர்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி மோசடியாக பணம் சம்பாதிக்கும் முகமைகளுக்கு தடை விதித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்போது இருக்கக்கூடிய அனைத்து முகமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
21.தாய்மொழி வழிக் கல்வி
கல்வி என்பது உலகிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கையான அடிப்படை உரிமையாகும். ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்கவும் அதன் மூலம் உலகை புரிந்து கொள்ளவும் சமூகத்துடன் சுமூகமாக கலந்துறவாடவும் சமூக வளர்ச்சியோடு தம்மை மேம்படுத்திக்கொள்ளவும் கல்வி அடிப்படையான ஓர் உரிமையாகும். தாய்மொழி வழியில் கற்பதும், கற்பிப்பதும் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்பது உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளை இந்தியக் கூட்டரசு ஏற்றுக்கொண்டு எல்லா குடிமகனும் அவரவர் தாய்மொழி வழியில் முழுமையான கல்வி பெற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தகுந்த காப்புகளை உருவாக்க வேண்டும்.
அ) அதற்கு, முதற்படியாக கல்வி மீது தனக்குள்ள அதிகாரத்தை இந்திய கூட்டரசு விட்டுக்கொடுக்கும் வகையில் கல்வித்துறையை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் உள்ள பொதுப்பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரங்களுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும்.
ஆ) இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள 1600க்கும் மேற்பட்ட மொழிகளும் தமது இறையாண்மையைக் காத்துக்கொள்ளும் வகையில், அந்தந்த மொழிகளின் மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் மொழி இன நலன்களுக்கான தேசிய பேராயம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் “தாய்மொழி வழிக்கல்வி கண்காணிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் உட்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவர வேண்டுமென இந்திய, தமிழக அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
22.எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
தமிழகத்தில் தமிழ்மொழியைக் காக்கும் வண்ணம் தமிழ்ப்பெயர் ஏற்போருக்கு ‘பெயர்மாற்ற அரசிதழ் பதிவிற்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்ப்பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் தமிழ்ப்பெயர் பலகைகள் வைப்பதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆங்கில வழி மழலையர் வகுப்புகள (Pre.KG, L.K.G, U.K.G) முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய உயர்கல்வி, தமிழ்வழியில் வழங்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுத்துகிறது.
தமிழகத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் நிலையை எட்ட தமிழக அரசின் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பதுபோல, உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்க வேண்டும்.
அதற்கு தமிழக அரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சி அப்படியே தேங்கிப்போய் உள்ளது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதற்கு முனைப்புக்காட்டி வழக்காடு மொழியாக தமிழை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுத்துகிறது.
23.மனிதவள மேம்பாட்டுத்துறை பட்டியலில் தமிழ் செம்மொழி
தமிழ்மொழியை “செம்மொழி” என ஏற்பளித்த இந்திய கூட்டரசுக்கு இம்மாநாடு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழ்மொழியை செம்மொழியாய் அறிவிக்கச் செய்ய உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தமிழ் செம்மொழி என்பதை இந்தியக் கூட்டரசின் பண்பாட்டுத்துறையின் பட்டியலில் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறையின் பட்டியலில் சேர்த்து அறிவிக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு ஓர் இருக்கை அமைத்து, தமிழில் உள்ள அரிய இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்கவும், பதிப்பித்து வெளியிடவுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
24.தமிழக எல்லைகள் மீட்பு
1956-ம் ஆண்டு நடந்த மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தமிழகத்தின் பல பகுதிகள், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு இணைக்கப்பட்டுவிட்டன. இது தமிழ் மக்களின் இறையாண்மைக்கு எதிரான செயலாக இம்மாநாடு கருதுகிறது. எனவே, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும், தேவிகுளம், பீர்மேடு, மூணாறு முதலிய பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள கோலார் தங்கவயல் பகுதியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் முடிவின் அடிப்படையில் இப்பகுதிகள் வாழும் தமிழர்கள் விருப்பப்படி இப்பகுதிகள் தமிழ்நாட்டின் எல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
25.தமிழகத்தில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் பாதுகாப்பு
பிரிட்டிசார் ஆட்சிக்கு முன்பிருந்தே தமிழகத்தில் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த பல இலட்சம் பேர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் சிறு மொழிகளைப் பேசும் பழங்குடிகள் ஆகியோர் தமிழகத்தின் தாயக மக்களாகவே கருதப்பட்டு, அவர்களின் தாய் மொழி பாதுகாக்க அவர்களின் விருப்பப்படியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
26.நதிநீர் உரிமை
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில எல்லைக்குள் ஓடும் நதிகள் அந்தந்த மாநிலத்தின் ஆளுகைக்கு உட்படும், அதற்கு முன்னோட்டமாக தமிழக அரசு தமிழக எல்லைக்குள் ஓடும் நதிகளைப் பாதுகாக்கும் வகையிலும் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டப்படி செயல் அதிகாரம் பெற்ற நதிகள் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தும் இந்திய கூட்டரசின் உடைமையாக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் கூட்டரசின் பட்டியலில் அறிவிக்க வேண்டும்.
ஆறுகள், நீர் நிலைகள், நீர்வழிகள் ஆகியன இயற்கை அன்னையின் உயிர்நாடிகள் இவற்றின் இயற்கைத் தன்மையில் எந்த ஒரு குறைபாடு ஏற்பட்டாலும் அது நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியை கடுமையாக பாதிக்கும். எனவே ஆறுகள், கனிமவள வரையறையில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும். மணலுக்கு மாற்றான பொருளை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும். மேலும், ஆறுகளிலிருந்து மணல் கொள்ளயடிப்போர் மீது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய அளவில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதைப்போலவே ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்ப்பது போன்ற நீர் வள ஆதாரங்களை சீர்குலைக்கும் நடவடிக்கை முற்றிலும் தடுக்க வேண்டும்.
27.தமிழக நிலங்களை பாதுகாக்க
தமிழகத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் இன்றைக்கு கேட்பாரின்றி வடஇந்தியர்கள், அன்னிய நாட்டு முதலாளிகள் மற்றும் இவர்களின் நிறுவனங்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வேளாண் விளைநிலங்களும் “ரியல் எஸ்டேட்” என்ற பெயரில் ஊக வணிகத்திற்கு உட்படுத்தப்பட்டு, வீட்டு மனைகளாகவும் தொழில் வளாகங்களாக மாற்றுவதாக் கூறி தரிசாக்கப்பட்டு வருகின்றன. இதனால் வேளாண் தொழில் தழைக்கும் என்பதற்கான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் தொடங்கி விட்டது. இந்நிலை தொடருமானால் சமூக உணவுச் சங்கிலி என்பது அற்றுப்போய்விடும் என்கிற மாபெரும் அச்சுறுத்தல் பெருகிவருகிறது. எனவே, தமிழக நிலங்களின்மீது தமிழ்நாடு அரசு தன்னுடைய சட்டப்பூர்வமான ஆளுமையை கொண்டுவர வேண்டும். அதற்கு ஐந்து பரிந்துரைக்கான இம்மாநாடு முன்வைக்கிறது.
அ) தமிழகத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் மாநில அரசின் மேலாண்மைக்கு உட்படுத்தும் வகையில் “தமிழக நில ஆணையம்” ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்வாணையத்தின் வழியாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான நிலங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வகை நிலங்களின் விற்பனை மற்றும் பரிமாற்றங்கள் எதுவாயினும் இவ்வாணையத்தின் இசைவின்றி இறுதி செய்யப்படக்கூடாது. இவ்வாணையத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதலானோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆ) விவசாய நிலங்களை விவசாய பயன்பாடுகளுக்கு மட்டும் விற்கவோ - வாங்கவோ முடியும் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். நிலங்கள் தொடர்ச்சியாக வடஇந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் கைப்பற்றுவதைத் தடுக்க, சீனாவில் நிகழ்ந்த அந்நிய நிறுவனங்களின் நிலபறிப்பு மோசடியை படிப்பினையாகக் கொண்டு நிதி மூலதன நோக்கிலான தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். பெரிய அளவுகளிலான தொழில் முனைவுகள், மாபெரும் பொருளாதார அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ள இச்சூழலில், நகர்புறம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சி என்பது புதுவித காலனியத்தை உருவாக்கியுள்ளது. இது, தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக் குறியாக்கி யுள்ளதால், பெருநகர் சார்ந்த தொழில்கள் பரவலாக்கப்பட வேண்டும்.
இ) தமிழ்நாடு முழுவதும் தொழில் முனைவுகள் பரவலாக்கப்படும் நிலையில் அதற்கு “நில ஆணையம்” அங்கீகரிக்கும் தரிசு நிலங்களையே பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட வேண்டும்.
ஈ) கோயில் நிலங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படவேண்டும். நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிலங்கள் ஏழைத் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக இந்திய அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும்.
உ) தமிழகத்தின் வேளாண் தொழிலை சீர்குலைத்து, விதைகள் மற்றும் உணவு உற்பத்தி முறையை ஏகாதிபத்திய மூலதன மற்றும் விதை நிறுவனங்களை சார்ந்து இருக்கும்படி உருவாக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் வேலிக் கருவை மரங்கள் விதைக்கப்பட்டன என்பதை சுற்றுச்சூழல் ஆய்வுகள் நிறுவியுள்ளன. இதனால் தமிழகத்தின் தென்கிழக்குக் கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வேளாண் நிலங்களும் தரிசாகிப் போயின. மேலும் இது தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பரவிக் கிடக்கிறது எனவே, தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்கவும் வேலிக்கருவை மரங்களை ஒழிக்க சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுத்துகிறது.
28.சென்னை குடிசைப் பகுதி மக்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு
சென்னை மாநகர் உருவாக்கப்பட்ட நாள் முதல் தலித் மற்றும் மத சிறுபான்மையினர் மாநகரின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதார ஆற்றலாக இருந்து வருகின்றனர். இம்மக்கள் இல்லையெனில் சென்னை என்பது இன்று உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமைமிகு பெருநகரமாக மாறியிருக்காது, ஆனால் எந்த மக்கள் இம்மாநகரை உருவாக்கினார்களோ அவர்கள் சென்னை மாநகரை விட்டு வெளியேற்றப்படுவது இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை நகராக இருந்த போதும் மாநகராக வளர்ந்த போதும் பின்பு பெருநகராக மாறிய போதும் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலையிலும் இம்மக்கள் வெளியேற்றப்பட்டு வந்துள்ளனர். குடிசை மக்களின் வாழ்விடங்களை மேம்படுத்த தொடங்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இம்மக்களை சென்னையை விட்டு வெளியேற்றும் வாரியமாக மாறியுள்ளது. எனவே சென்னையில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு அவர்கள் வாழுகின்ற பகுதியிலேயே வீடுகளைக் கட்டிக்கொள்ள தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். அப்படி கட்டாயமாக வெளியேற்றப்படும் குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் குடியிருந்த இடத்திற்கு அருகிலேயே கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கொள்கிறது.
29.முழு மதுவிலக்கு
மது உள்ளிட்ட போதைப் பழக்கவழக்கங்களால் நாடு தழுவிய அளவில் ஏழை எளிய மக்களின் வாழ்வு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. எண்ணற்ற பல குடும்பங்களின் உறவுகள் சிதைந்து சிதறும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் பள்ளிப்பருவத்திலிருந்தே குடிப்பழக்கத்திறகும் இன்னும் பிற போதைப் பழக்கங்களுக்கும் அறிமுகமாகின்றனர்.
இதனால் அவர்களின் எதிர்காலம் இருண்டு பாழாகிறது. இதற்கு அரசின் கொள்கை முடிவுகளே காரணமாக அமைகின்றன என்பதை வேதனையோடு விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் ஏழை எளியோரின் நலன்களுக்கென எண்ணற்ற பல திட்டங்களைத்தீட்டி தமிழக அரசு அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எனினும் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் தலித்துகள், மீனவர்கள் மற்றும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வெகுவாக பாதிக்கச் செய்கின்றன.
எனவே மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் அடித்தட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மதுவிலக்குக் கொள்கையை ஏற்று அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமெனவும் பிற போதைப்பொருட்களின் புழக்கத்தை தீவிரமாக தடுத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு தோழமையோடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அத்துடன், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் அனைவருக்கும் பிற துறைகளில் தகுதிக்குரிய மாற்று வேலைகளை வழங்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தேசத்தந்தை என காந்தியடிகளைப் போற்றும் இந்திய ஆட்சியாளர்கள் காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கையை இந்திய அரசின் தேசியக் கொள்கையென ஏன் அறிவிக்கக்கூடாதென இம்மாநாடு கேள்வியெழுப்புகிறது. இந்நிலையில் முழு மதுவிலக்குக் கொள்கையை அனைத்திந்திய அளவில் நடைமுறைப்படுத்திட சட்டம் இயற்ற வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
30.விக்கிலீக்ஸ் ஜுலியன் அசாங்கேவுக்குப் பாராட்டு
உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்குள்ளும் மூக்கை நுழைத்து, தனது வல்லாதிக்கத்தை திணித்து வரும் அமெரிக்க வல்லரசின் உச்சந்தலையில் இடி இறக்கியதைப்போல் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் அதிஉயர் கமுக்க நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் எனும் இணைய தளத்தினூடாக அம்பலப் படுத்தியிருக்கிறார், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த இணையத்தள ஊடக வியலாளர் ஜுலியன் அசாங்கே!
அவரின் இந்த அளப்பெரிய செயல் ஊடகவியல் அறத்திற்கு எதிரானது அல்ல! தனிநபரின் கமுக்கங்களை அம்பலப்படுத்துவதில் அரசும் ஆட்சியாளர்களும் ஊடகவியல் அறத்திற்கு ஊறு விளைவிக்காது என்று ஞாயப்படுத்தப்படுமேயானால் அமெரிக்க போன்ற வல்லரசியல் கொடு நெறியாளர்களின் கமுக்கங்களை அம்பலப்படுத்துவதிலும் ஞாயமுண்டு என விடுதலைச்சிறுத்தைகள் நம்புகிறது.
எனவே, அமெரிக்க வல்லரசின் வல்லாதிக்க இடுப்பை முறித்து, வளரும் நாடுகளின் இறையாண்மைக்கு வலுவான பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ள ஜுலியன் அசாங்கேவை இம்மாநாடு நெஞ்சார பாரட்டுகிறது. அவருடைய உயிருக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டுமெனவும் ஐ.நா பேரவைக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
2 கருத்துகள்:
idhu ulaga thamilinathukku mattumalla, samooga samaneethikke adipadai thevai, thalaivar thirumaval mattume ulagalanthavagaiyil sindhikka mudiyum
idhu ulaga thamilinathukku mattumalla, samooga samaneethikke adipadai thevai, thalaivar thirumaval mattume ulagalanthavagaiyil sindhikka mudiyum
கருத்துரையிடுக