பெட்ரோல், டீசல் விலை உயர்வு: விலையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் இந்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்!
ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை எட்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டதில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலோடு இவ்வாறு விலை உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த காலங்களில் இந்திய அரசே பெட்ரோல் விலை வரையறைகளைத் தீர்மானித்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக, அந்த அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அளித்து விட்டதனால், அந்நிறுவனங்களே விலை உயர்வைத் தீர்மானித்து, அறிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கு பெட்ரோலிய அமைச்சகத்தின் அனுமதி பெற்று அறிவிக்கும் ஒரு ஏற்பாட்டை வைத்துள்ளனர். டீசல் விலையின் வரையறைகளைத் தீர்மானிக்கிற அதிகாரத்தை மட்டும் ஏனோ இன்னும் எண்ணெய் நிறுவனங்களிடம் இந்திய அரசு கைமாற்றாமல் வைத்துள்ளது. அதனால், டீசல் விலை ஓர் ஆண்டில் ஐந்து முறைகள் மட்டும் உயர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலைகளும் தீர்மானிக்கப்படுவதாக அவ்வப்போது காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்தியச் சந்தையின் நிலைமைக்கு ஏற்பவும், இந்திய மக்களின் வாங்கும் சக்திக்கேற்பவும் சந்தைப் பொருளாதாரத்தைக் சமன் செய்யும் கடமையே ஆட்சியாளர்களின் முதன்மையான கடமையாகும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால், இந்தியச் சந்தையிலும் அதே வேகத்திலும் அளவிலும் விலை உயர்த்தப்படும் என்பது குடிமக்களின் வலிமையறிந்து இயங்கும் ஓர் அரசின் இயல்பாக இருக்க முடியாது. அத்துடன், இவ்வாறு விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கும் இந்திய அரசின் இத்தகைய கொள்கை முடிவு வெகுமக்களுக்கு எதிரான முடிவேயாகும்.
இந்திய அரசின் இந்த முடிவால், ஏழை எளிய உழைக்கும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு இம்முடிவை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் விலையை எட்டாவது முறையாக தற்போது உயர்த்தியுள்ள முடிவையும் உடனே திரும்பப் பெற இந்திய அரசு ஆணையிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓர் அரசால் மட்டுமே குடிமக்களைப் பொருளாதாரச் சுமைகளிலிருந்தும் வறுமைக் கொடுமைகளிலிருந்தும் ஓரளவேனும் பாதுகாத்திட இயலும். எனவே, பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் இந்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதுடன், அவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக