உள்ளாட்சி தேர்தல்: 14 இஸ்லாமிய கட்சிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி!


நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இஸ்லாமிய அமைப்புகளோடு இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் வெளியிட்டார்.பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், விடுதலை சிறுத்தை கட்சி 14 முஸ்லிம் அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறது. தேசிய லீக், இந்திய தேசிய லீக், சுன்னத் சமாத் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.இந்தக் கூட்டணியில் மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகளில் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். மேயர் தொகுதிகளில் மட்டும்தான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், வார்டுகளில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள்.கூட்டணியில் சேர பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் யாரும், மாற்று அணிக்கு தலைமை பொறுப்பேற்க முன் வரவில்லை. விருப்பமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், சிறுபான்மை சமூகமும், தலித் அமைப்பும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளோம்.இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் திராவிட கட்சிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது சவாரி செய்து வந்திருக்கின்றன. ஆகவே சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்தால்தான் மாற்றம் ஏற்படும்.இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய முறைகேடும், குளறுபடியும் நடந்திருக்கிறது. மதுரையில் நூறு வார்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 26 வார்டுகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் 6 வார்டுகளே ஒதுக்கியுள்ளனர். சென்னையில் 200ல் 40 வார்டுகள் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் 26 வார்டுகள் மட்டுமே ஒதுக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எப்படியென்றால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாலேயே அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது. அதற்கு மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. ஆகையால் இரண்டு பேரும் கலந்து பேசி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, எம்.ஜி.ஆரை அரசியலில் உருவாக்கியதில் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் பங்கு உண்டு. அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் விஜயகாந்த்தை ஆதரிக்கிறார்கள். இவ்வளவு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் திராவிட கட்சிகளையே அனுசரிப்பது ஏன் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக