பரமக்குடியில் 7 தலித்துகள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும்! தொல். திருமாவளவன் வேண்டுகோள்!
பரமக்குடியில் 7 தலித்துகள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று (13.9.2011) காலை 11 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-
"பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து எதிர்வரும் 16.9.2011 அன்று சென்னையிலும், 20.9.2011 அன்று தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து மதுரையிலும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்தினருக்கும் மண்டல மாணிக்கம் கிராமத்தில் படுகொலையான பழனிக்குமார் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அத்துடன் அக்குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் இத்துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அரசு தவறினால் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்.
இத்துப்பாக்கிச்சூடு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய கருத்து வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை அசிங்கப்படுத்தி பழனிக்குமார் எழுதியதாகவும் அதனால்தான் படுகொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை எழுதிக் கொடுத்ததை சட்டப்பேரவையில் முதல்வர் படித்திருப்பது மிகுந்த வருத்தத்தையளிக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிற பண்ருட்டி இராமச்சந்திரன்கூட இப்படுகொலைகளுக்கு நீதிவிசாரணை தேவையில்லை என்று பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். காவல்துறையின் தவறான அணுகுமுறையால்தான் இந்தப்படுகொலைகளும் கலவரமுமே தவிர ஜான் பாண்டியன் அந்தக் கிராமத்திற்குள் நுழைய முயன்றார் என்பது காரணமல்ல.
ஒரு போலீஸ் வேனை எரித்ததால்தான் துப்பாக்கிச்சூடு என்றால் ஒரு போலீஸ் வேனின் விலை 7 தலித்துகளின் உயிரா? அப்படியென்றால் இந்த அரசு தலித் விரோத அரசாகத்தான் செயல்படுகிறது. இனி வரும் காலங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக நடத்தி முறைப்படுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் நிருபர்களின் கேள்விக்கு பதில் கூறும்போது, "10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளான இசுலாமியர்களையும் மற்றும் நளினியையும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விடுதலை செய்ய வேண்டும். திருச்சியில் 14.9.2011 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒழிப்பு மாநாடு திருச்சி இடைத் தேர்தல் முடிந்த பின்னர் நடத்துவது என்று முடிவு செய்து தள்ளி வைக்கப்படுகிறது. 17.9.2011 அன்று நடைபெறவிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு தள்ளி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.
பேட்டியின்போது செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, தனிச்செயலாளர்கள் பாவலன், இளஞ்சேகுவேரா, கரும்புலி முத்துக்குமார் பாசறையின் முதன்மைச்செயலாளர் சங்கத்தமிழன், கருத்தியல் பரப்பு மாநிலத் துணைச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
இவண்
1 கருத்துகள்:
தேவேந்திகுல மக்களுக்கு தலித் என்று பெயர் வைக்க நீங்கள் யார்? பட்டியல் இனத்தில் இருப்பதால் தலித் என்று அழைப்பதா.? தேவேந்திரர்கள் சேரசோழ பாண்டியராய் நாடாண்டவர்கள்
கருத்துரையிடுக