உள்ளாட்சித் தேர்தல் செப். 9 முதல் 15 வரை விருப்ப மனுக்கள்! கூட்டணி குறித்து செப். 17 மாநிலச் செயற்குழுவில் முடிவு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் 5Š9Š2011 அன்று சென்னை ஜெமினி இல்லத்தில் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. உள்ளாட்சி அமைப்புகளுக்கான துணைத் தலைவர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டு உரிமையானது ஏறத்தாழ மூவாயிரம் இடங்கள் கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்தே மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு இருப்பதைப் போன்று துணைத் தலைவர் பதவிகளிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகமெங்கும் வருகின்ற 12Š9Š2011 அன்று வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

2. உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து 9Š9Š2011 முதல் 15Š9Š2011 வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விரும்புவோர் சென்னை தலைமை அலுவலகத்திலோ அல்லது தலைமையிலிருந்து நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவினரிடத்திலோ விருப்ப மனுக்களை வழங்கலாம். விருப்ப மனு செலுத்துவோருக்கான விண்ணப்பக் கட்டணங்கள் மாநகர மேயர், நகர்மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ரூ. 5000, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 3,000, மாநகர் மாமன்ற உறுப்பினர், நகராட்சி உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தலா ரூ. 1000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ. 500 வீதம் நிர்ணயிக்கப்படுகிறது. கட்டணத்தைக் கேட்பு வரைவோலையாகச் செலுத்த வேண்டும். மகளிர் ஐம்பது விழுக்காடு கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது.

3. உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு வரவேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து வரும் 17Š9Š2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ள மாநிலச் செயற்குழுவில் கலந்தாய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

4. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கடந்த 28Š8Š2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து உயிர்நீத்த வீரமங்கை செங்கொடிக்கு விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது. செங்கொடியின் தியாகத்தைப் போற்றும் வகையில் செப்டம்பர் 30 வரையில் தமிழ்நாடெங்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வீரவணக்கப் பொதுக்கூட்டங்களை நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

5. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விலக்கிக் கொள்ளும்படி மாண்புமிகு முதல்வர் தலைமையில் அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது..


இவண்

வன்னிஅரசு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக