தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதோடு அவரது படம் பொறித்த அஞ்சல்தலையும் வெளியிட வேண்டும்! தொல்.திருமாவளவன் கோரிக்கை
சாதி ஆதிக்கத்தை எதிர்த்துக் களப்பலியான தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று ஆண்டுதோறும் உழைக்கும் மக்கள் பல்லாயிரக் கணக்கில் பரமக்குடியில் அணி திரண்டு அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய ஈகத்தைப் போற்றும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அணி திரண்டு வந்து வீரவணக்கம் செலுத்துகின்றனர். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள சாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அத்துடன் இந்திய அரசும் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அவருடைய திருவுருவப் படம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எனவே வெகுமக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் தமிழக அரசு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென்றும், இந்திய அரசு அவரது நினைவாக அஞ்சல் தலையை வெளியிட வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இலட்சோப லட்சம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
இவண்,
(தொல். திருமாவளவன் )
0 கருத்துகள்:
கருத்துரையிடுக