விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டி! - விசிக செயற்குழு தீர்மானங்கள்


மாநிலச் செயற்குழு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு 23Š9Š2011 அன்று வேளச்சேரியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற அக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்து விரிவாகக் கலந்தாய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நடப்புகளையும், அதனடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பலரும் தங்கள் கருத்துக்களை வழங்கினர். நிறைவாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிய, அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி, கடந்த 28Š8Š2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து உயிர்நீத்த வீரநங்கை செங்கொடி அவர்களுக்கும், கடந்த 11Š9Š2011 அன்று தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் பரமக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும், தடியடி வன்முறை வெறியாட்டத்திலும் படுகொலையான தோழர்கள் மஞ்சூர் ஜெயபால், காக்கனேந்தல் வெள்ளைச்சாமி, பல்லவராயனேந்தல் கணேசன், சடையநேரி முத்துக்குமார், வீராம்பல் பன்னீர்செல்வம், கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனி, மற்றும் 9Š11Š2011 அன்று சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மண்டலமாணிக்கம் பழனிக்குமார் ஆகியோருக்கும், துப்பாக்கிச் சூட்டினை அடுத்து கைது நடவடிக்கை என்னும் பெயரால் காவல்துறை நடத்திய வேட்டையினால் தப்பி ஓடியபோது உயிரிழந்த தொருவலூர் வேலு, களக்குடி காளியப்பன் ஆகியோருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அத்துடன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் கட்சியின் மாநிலச் செயற்குழு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

2. பரமக்குடியில் நடந்தேறிய காவல்துறையின் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அரச பயங்கரவாத ஒடுக்குமுறையை விசாரிப்பதற்கென தமிழக அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் மீது விடுதலைச் சிறுத்தைகளுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த காலங்களில் இவ்வாறு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி பாஸ்கரன் ஆணையம், நீதிபதி கோமதிநாயகம் ஆணையம், நீதிபதி மோகன் ஆணையம், நீதிபதி வரதன் ஆணையம் போன்ற பல்வேறு நீதிவிசாரணை ஆணையங்கள் அளித்த அறிக்கைகள் யாவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே அமைந்திருந்தன. அவற்றைப் போல தற்போது நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சம்பத் ஆணையமும் தமிழக அரசு விரும்புவதற்கு ஏற்ப, தலித் மக்களுக்கு எதிரான அறிக்கையினை வழங்குவதற்கே வாய்ப்புகள் உள்ளன. எனவே தமிழக அரசின் தலையீடு இல்லாத ஓர் அமைப்பு பரமக்குடி அரச பயங்கரவாதத்தை விசாரிக்க வேண்டும். எனவே இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மையப் புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென தமிழக அரசை இந்த மாநிலச் செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

3. பரமக்குடியில் நடந்தேறிய அரச வன்கொடுமைகளுக்கு உடனடிக் காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை உடனடி பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. அத்துடன், அரச பயங்கரவாதத்துக்குப் பலியானோர் மற்றும் மண்டலமாணிக்கம் பழனிக்குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அவர்கள் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதுடன், அந்நிகழ்வின்போது அப்பாவி தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

4. எதிர்வரும் 2011 அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

5. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள், சுழற்சி முறையில் நிகழ்ந்துள்ள அத்துமீறல்கள் ஆகியவை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கட்சியின் சார்பில் வழக்குத் தொடுப்பது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது. அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைகளிலும் உள்ள துணைத் தலைவர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

6. கடந்த 1988ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மற்றும் கார்ப்பசேவ் ஆகியோரிடையே உருவான உடன்பாட்டின் அடிப்படையில் தூத்துக்குடி அருகே உள்ள கூடங்குளம் என்னுமிடத்தில் நிறுவப்பட்டுள்ள அணுமின் உலையால் அப்பகுதிவாழ் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிர்காலத்தில் பேராபத்து நிகழக்கூடும் என்கிற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விரைவில் முதலாவது திட்டம் இயக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் மேலும் இரண்டாவது புதிய திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதிவாழ் மீனவர்களும், பிற சமூகங்களைச் சார்ந்த பொதுமக்களும் கடந்த 11Š9Š2011 முதல் 21Š11Š2011 வரையில் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான சூழலில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து கூடங்குளம் அணுமின் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் இச்செயற்குழு இந்திய அரசை வற்புறுத்துகிறது. மேலும் கல்பாக்கத்தில் இயங்கிவரும் அணுமின் உலையால் பரவிவரும் அணுக்கதிர் வீச்சினால் அப்பகுதிவாழ் மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்திய அளவில் ஒட்டுமொத்தமாக அணுமின் உலைத் திட்டங்களைக் கைவிட்டு மாற்று மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7. கடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது தி.மு.க. மற்றும் அதிமுக கூட்டணிகளில் இடம்பெற்றிருந்த தோழமைக் கட்சிகள் அனைத்தையும் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அவ்விரு கட்சிகளும் ஒருபொருட்டாகவே மதிக்காமல் புறக்கணித்துள்ளன. தேவையின்போது பயன்படுத்திக்கொள்வதும், பின்னர் உதறித் தள்ளுவதுமான போக்குகளை அவ்விரு கட்சிகளும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. இதனால் வளரும் கட்சிகள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தோழமைக் கட்சிகளைப் பொருட்படுத்தாத தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளின் ஏகாதிபத்திய மேலாதிக்க மனோநிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த மாநிலச் செயற்குழு வேதனையோடு சுட்டிக்காட்டுவதுடன் தமது கண்டனத்தையும் பதிவுசெய்கிறது..

இவண்


(தொல். திருமாவளவன்)

2 கருத்துகள்:

regards and wish you all sucesses for the comindalith the pepole in tamilnadu have a greate faith on you pls give voice for our dalith improvement thaDeaer Thiruma iam always keen on your grouth and the develpement ou your party my huble request is both the dravidian party has done nothing for n the DALITH people iam affraid VCK should not forget the dalith improvement g local bodies elecetion from your supporter
R.MURALIDHARAN

13 அக்டோபர், 2011 அன்று 8:31 PM comment-delete

dear Thiruma iam always follow up your grouth in our state now you are gaining considerable support from the state and my humble request is dont deviate from your basice support of the dalith and show the less intrest for ilam issue and the dalith people almost depend you for the improvement of dalitht regards and wish u for the greate sucesses for the local bodies elecetion from
R.MURALIDHARAN

13 அக்டோபர், 2011 அன்று 8:37 PM comment-delete

கருத்துரையிடுக