"டேம் 999' படத்தைத் திரையிடும் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தொல்.திருமாவளவன் அறிவிப்பு!


முல்லைப் பெரியாறு அணை பற்றி  
தமிழக மக்களிடையே பீதியை, பதற்றத்தை ஏற்படுத்தும்

"டேம் 999' படத்தைத் திரையிடும் 
திரையரங்குகளை முற்றுகையிடுவோம்!

தொல்.திருமாவளவன் அறிவிப்பு!


முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவரும் நிலையில், அவ்வணையை மையப்படுத்தி கேரள அரசு அயல்நாட்டுத் திரைப்பட நிறுவனத்துடன் இணைந்து "டேம் 999' என்கிற ஆங்கிலப் படத்தைத் தயாரித்து வெளியிடவுள்ளது. இப்படத்தில் பழைய அணைகள் உடைந்தால் எத்தகைய பாதிப்பு நேரும் என்பதனை திரைப்படத்தின் கருப் பொருளாக அமைத்து, அதனை முதன்மையான காட்சியாகப் படமாக்கியுள்ளனர்.

கேரள அரசு, கேரளாவில் அதற்கான படப்பிடிப்பு வசதிகளை ஏற்பாடு செய்துகொடுத்து உதவியிருக்கிறது. முல்லைப்பெரியாறு அணையினையும் படத்தில் காட்சியாக்கியுள்ளனர். அதில் முல்லைப் பெரியாறு அணையே உடைவதைப் போலவும், அதனால் பல லட்சம் மக்கள் உயிரிழப்பதைப் போலவும் அந்தப் படத்தின் முதன்மையான காட்சியாகப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் தமிழ் மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கி, உளவியலாக அந்த அணையை உடைப்பதற்கு தமிழக மக்களே ஒப்புதல் அளிக்க முன்வரவேண்டும் என்கிற வகையில் அவ்வாறு படமாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய உத்திகளை கடந்த சில ஆண்டுகளாகவே கேரள அரசு மற்றும் ஆட்சியாளர்கள் கையாண்டு வருகின்றனர். இது, கேரள மாநிலத்தின் ஆளும் வர்க்க வக்கிர உணர்வை வெளிப்படுத்துகிறது.

முல்லைப் பெரியாறு அணை மிக வலுவாக உள்ளதாகவும், அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவைச் சார்ந்தவர்கள் ஏற்கனவே உறுதியளித்துள்ளனர். இருப்பினும் இந்த அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்பதை கேரள ஆட்சியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றனர். இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் இத்தகைய உத்தியைக் கையாண்டு "டேம் 999' ஆங்கிலத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுகின்றனர். இப்படம் தமிழகத்தில் வெளியானால் தமிழ் மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கும்; பதற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே இப்படத்தைத் தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அத்துடன், முல்லைப் பெரியாறு சிக்கல், இரு மாநிலங்களுக்கிடையிலான உணர்ச்சிமிக்க பிரச்சனையாக இருப்பதனால் இந்திய அரசும் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். இப்படத்தை இந்தியாவில் எங்கும் திரையிடாமல் தடை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தைச் சார்ந்த திரையரங்க உரிமையாளர்கள், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையினர் இத்தகைய திரைப்படங்களை வெளியிடுவதற்கு முன்வரக் கூடாது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தோழமையோடு கேட்டுக்கொள்கிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மீறி இப்படம் திரையிடப்படுமேயானால் அப்படம் திரையிடப்படும் திரையரங்குகளை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடுவோம் என அறிவிக்கப்படுகிறது.

 (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக