விலை உயர்வை கண்டித்து திருமா தலைமையில் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பால் விலை, பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளதைக் கண்டித்தும், உடனடியாக திரும்பப் பெறக் கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக 21-11-2011 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் பேசும்போது, பெட்ரோல் டீசல் விலை  உயர்ந்தாலும் பாதிக்கப்படுவது ஏழை எளியமக்கள் தான்,  பால்விலை உயர்ந்தாலும் பாதிக்கப்படுவது இந்த அடித்தட்டு மக்கள்தான்,  பேருந்து கட்டணம் உயர்ந்தாலும் வெகுவாக பாதிக்கப்படுவது இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்தான். இந்த நிலையில் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு அரசியலில் போராட வேண்டும் என்ற முனைப்பு விடுதலைச்சிறுத்தைகளுக்கு உண்டு. ஆகையால்தான் இந்த இரண்டு மூன்று நாட்கள் இடைவெளியில் இந்தப் போராட்டத்தை அறிவித்தோம். இன்றைக்கு தமிழக அரசு, குறிப்பாக, தமிழக முதல்வர் இந்த விலை உயர்வை, கட்டண உயர்வை நியாயப்படுத்துகிறார்.  தமிழக அரசுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என்கிறார். திமுக ஆட்சி காலத்தில் செய்த ஊழல்களால்தான் விலை உயர்வை, கட்டண உயர்வை அறிவிக்க வேண்டிய நிலைக்கு இந்த அரசு தள்ளப்பட்டது என்று தமிழக முதல்வர் விளக்கம் அளிக்கிறார். 

திமுக அரசு அல்லது திமுக ஆட்சி காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்; அதனால்தான் என்னை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்று தேர்தலில் வெற்றிபெற்ற உடனே தமிழக முதல்வர் அறிவித்தார் ஆக அந்த ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை சரிசெய்வார் என்கிற நம்பிக்கையில்தான் அதிமுக பொதுசெயலாளரிடம் ஆட்சியை இந்த மக்கள் தமிழக மக்கள் ஒப்படைத்து இருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி ஐந்தாண்டு காலம் திமுக அரசு மக்கள் விரோத அரசாக விளங்கியது எல்லாத் துறைகளிலும் ஊழல்கள் தலைவிரித்து ஆடின, எனவே திமுக அரசை ஆட்சியை து£க்கி  எறிந்துவிட்டார்கள் மக்கள். நல்லாட்சி வழங்குவேன் என்று என் மீது நம்பிக்கை வைத்தே எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்று பெருமையோடு சொன்னார். 

ஆக திமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தவை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிகழக்கூடாது என்பதுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பு.  திமுக ஆட்சிக் காலத்தில் விலை உயர்வு, கட்டண உயர்வு அதிகரித்து இருக்கிறது என்று சொன்னால் அந்த விலை உயர்வு, கட்டண உயர்வு இந்த ஆட்சியில் நிகழக்கூடாது என்பதுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்போடுதான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆட்சியில் செய்த ஊழல்தான் இந்த ஆட்சியில் பால் விலை உயர்வதற்கும் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது என்று விளக்கம் சொல்வது எந்த வகையிலே நியாயமாக இருக்க முடியும் என்பதை பொது மக்கள் தயவுகூர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைக்கு பேருந்திலே அதிகமாக பயணம் செய்வது யார்? சாதாரண மக்கள், சொந்தவண்டி வாங்கமுடியாதவர்கள், விலை உயர்ந்த வண்டியில் பயணம் செய்ய முடியாதவர்கள், அரசுப் பேருந்தைப் பயன்படுத்தி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செல்பவர்கள் சாதாரண மக்கள். இன்று இந்தக் கட்டணத்தை இரண்டு மடங்கு மூன்று மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள் என்றால் பாதிக்கப்படுவது யார்? எந்த மக்கள் வாக்களித்தார்களோ அந்த மக்களுக்கு அதிமுக அரசு காட்டும் நன்றி உணர்வு இதுதானா? ஒரு அரசு நல்லரசு என்று சொன்னால் அடித்தட்டு மக்களை பாதிக்காத அளவு அமைந்தால்தான் அது நல்ல அரசு.  எனவே பால் விலை உயர்வையும், பேருந்துக் கட்டண, மின் கட்டண உயர்வையும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

தமிழக அரசே,

உயர்த்தாதே!உயர்த்தாதே!பால் விலையை உயர்த்தாதே!அடிக்காதே!அடிக்காதே! ஏழைக் குழந்தைகள் வயிற்றில் அடிக்காதே!
திரும்பப் பெறு! திரும்பப் பெறு! பால் விலை உயர்வை திரும்பப் பெறு!

உயர்த்தாதே!உயர்த்தாதே!பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாதே! அடிக்காதே!அடிக்காதே!ஏழைகள் வயிற்றில் அடிக்காதே!

திரும்பப் பெறு! திரும்பப் பெறு! பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெறு!
ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, , மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், ஆ. விடுதலைச்செல்வன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக