விடுதலைச் சிறுத்தைகளின் புத்தாண்டு வாழ்த்துகள்
உலக நாடுகள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றுக்கொண்டாடும் இந்தவேளையில், கிறித்தவப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் 2012ஆம் ஆண்டுக்கான இனிய புத்தாண்டு வாழ்த்துகளை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
மொழி, இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்தனியே, மாதங்களை, ஆண்டுகளை வரையறுத்து, ஒவ்வோர் இனமும் தனித்தன்மையோடு இயங்கினாலும், அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைச் சார்ந்தவர்களும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றுக்கொண்டாடுவது இயல்பான நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்துக்களின் ஆண்டுகள், கிறித்தவர்களின் ஆண்டுகள், இசுலாமியர்களின் ஆண்டுகள் என்று மதம் சார்ந்த ஆண்டுக் கணக்குகளும், தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என இனம் சார்ந்த ஆண்டுக் கணக்குகளும், ஐரோப்பியர், அராபியர், சீனர் என தேசம் சார்ந்த ஆண்டுக் கணக்குகளும் மனித வாழ்வில் வெவ்வேறாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இயேசு பெருமானின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு, 'கிறிஸ்து பிறப்பதற்கு முன்' (கி.பி.), 'கிறிஸ்து பிறப்பிற்குப் பின்' (கி.மு.) என்று ஆண்டுக் கணக்குகளை வரையறுத்து ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களையும் உலக நாடுகள் நடைமுறையில் பின்பற்றி வருகின்றன. அதைப் போல கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்ததைக் கணக்கிட்டு அதிலிருந்து திருவள்ளுவராண்டு வரையறை செய்யப்பட்டு தமிழினத்தின் ஆண்டு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழினத்திற்கென்று திருவள்ளுவராண்டு தனியே கையாளப்பட்டு வருகிறது.
எனினும் தமிழர்களின் அன்றாட வாழ்வும், நிர்வாக நடைமுறைகளும் ஆங்கில ஆண்டுகளின் அடிப்படையிலேயே இயங்கி வருவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஆங்கிலப் புத்தாண்டையும் நாம் வரவேற்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
2011ஆம் ஆண்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வருடத்தின் கடைசி நாட்களில் 'தானே' புயலின் தாக்குதலையும் சமாளித்து 2012ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கடந்தகாலப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு வரும் 2012ஆம் ஆண்டினைத் திட்டமிட்டு தமிழினத்தின் தலைநிமிர்வுக்கான ஆண்டாக அமைத்துக்கொள்ளும் வகையில் இப்புத்தாண்டினை வரவேற்போம்.
ஈழத் தமிழர்களின் துயர்களைத் துடைப்பதற்கும், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், சாதிக்கொடுமை உள்ளிட்ட பிற வன்கொடுமைகளிலிருந்து தலித் மற்றும் அனைத்து விளிம்புநிலை மக்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்றதொரு ஆண்டாக 2012ஆம் ஆண்டு அமைந்திட தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து நிற்போம் எனவும் இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
(தொல்.திருமாவளவன்)
2 கருத்துகள்:
wish u all a very happy and prosperous new year.
by G.JOHNSON
north chennai
WISH YOU ALL A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR.
G JOHNSON north chennai.
கருத்துரையிடுக