புயல் சேத பகுதிகளை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் : திருமா




கடலூர்&விழுப்புரம் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.

மத்திய குழுவினரிடம் திருமாவளவன் மனு 

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட வந்த மத்திய குழுவினரிடம் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கடலூர்&விழுப்புரம் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை பிரதமர் நேரில் வந்து பார்வையிட மத்திய குழுவினர்கள் வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனு கொடுத்த பின்னர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:

பன்மடங்கு பாதிப்பு

தானே புயலால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகள் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சுனாமியின் போது ஏற்பட்ட பாதிப்பை விட பன்மடங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மன்மோகன்சிங் நேரில் வந்து பார்வையிட வேண்டும். அதுதொடர்பான மனுவை மத்திய குழுவின் தலைவரிடம் கொடுத்துள்ளோம்.

தமிழக அரசு வழங்கும் ரூ. 2,500, 5 ஆயிரம் ரூபாய் என்று நிவாரணத்தொகை வழங்குவது போதாது. அதனை கூடுதலாக வழங்க வேண்டும். முந்திரி, பலா, தென்னை போன்று பல லட்சம் மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. பள்ளி கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

நிதியை குறைக்காமல் வழங்க வேண்டும்

இதை ஈடுகட்ட கூடுதலாக நிதி வேண்டும். மத்திய அரசிடம் தமிழக முதல்&அமைச்சர் ஜெயலலிதா, ரூ.5,520 கோடி கோரியுள்ளார். ஒரு ரூபாய் கூட குறைக்காமல் மத்திய அரசு இதை அப்படியே வழங்க வேண்டும். இதுபோன்ற பாதிப்பு ஏற்படும் காலங்களில் பார்வையிட வரும் மத்திய ஆய்வுக்குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.

புயல் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். 10 நாட்களுக்கு மேலாகியும் உடனடி நிவாரண பணிகள் ஒரு சில இடங்களில் நடைபெறவில்லை என்பது வேதனையளிக்கிறது. பணிகளில் மந்தமாக நடைபெறுகிறது.இதுபோன்ற சமயங்களில் பொதுமக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் கூட உதவிகள் செய்ய முன்வரவில்லை என்பது இன்னும் வேதனையளிக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் எம்.பி. கூறினார். 

இதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கடலூர் விழுப்புரம் புதுச்சேரி சென்று தானே புயலினால் பதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை செய்தார். 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக