விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சிராப்பள்ளி பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம்

6-1-2012 வெள்ளிக்கிழமை - கற்பகரட்சகி மகால், திருச்சிராப்பள்ளி




தீர்மானங்கள்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழு 6-1-2012 அன்று  வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், திருச்சிராப்பள்ளி, கற்பகரட்சகி மகாலில்,  கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் தலைமையில் கூடியது.  மூன்று  ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைமை நிர்வாகிகள் முதல் ஒன்றியப் பொறுப்பாளர்கள் வரை புதிய பொறுப்பாளர்கள் நியமனம், நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த மூன்றாண்டு காலச் செயல்திட்டங்கள் மற்றும் வருங்காலச் செயல்திட்டங்கள் போன்றவை இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுபடு பொருள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.  கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமாகப் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. வீரவணக்கம்

 முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்கான அறப்போராட்டத்தில்  கேரள அரசு மற்றும் இந்திய அரசின் தமிழின விரோதப்  போக்கைக் கண்டிக்கும் வகையில் தமது இன்னுயிரை ஈகமளித்த தோழர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இடிமுழக்கம்  சேகர், சின்னமனூர் மணி, சின்னமனூர் இராமமூர்த்தி ஆகியோருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.  அத்துடன் கடந்த திசம்பர் 30, 2011 அன்று நள்ளிரவுக்கு மேல் கரையைக் கடந்த 'தானே' புயலின் தாக்குதலால் கடும் பாதிப்புக்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உயிர்ப் பலியான சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் இப்பொதுக்குழு தமது அஞ்சலியைச் செலுத்துகிறது.

2. பேரிடர் பாதிப்பு

 அண்மையில் 'தானே' புயலின் தாக்குதலால் கடலூர், விழுப்புரம்  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதிகள் வரலாறு காணாத அளவில் மிகக் கடுமையான  பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.  இலட்சக் கணக்கான கூரைக் குடிசைகள் சின்னாபின்னமாகிச் சிதைந்துள்ளன.  நெல், மக்காச்சோளம் போன்ற விவசாயப் பயிர்களும், முந்திரி, பலா, தென்னை, வாழை போன்ற பணப் பயிர் மரங்களும் இன்னும் பிற நிழல்தரும் மரங்களும் இலட்சக் கணக்கான அளவில் வேரோடு வீழ்ந்துள்ளன.  அத்துடன் பல்லாயிரக் கணக்கான மின் கம்பங்களும் தலைகீழாய்ச் சாய்ந்துள்ளன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு புயல் பாதிப்புக்குள்ளான இப்பகுதிகள் கடந்த ஒரு வார காலமாக இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.  பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. குடிசைகளை இழந்து, பள்ளிக்கூடங்கள், திருமணக் கூடங்கள் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள்  குடிநீர், உணவு, மாற்று உடை ஏதுமின்றி கடும் இன்னலுக்காளாகியுள்ளனர். 

 இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிகமிக மந்தமான நிலையில் முடங்கியுள்ளன.  குறிப்பாக கடலூர் மாவட்டம் ஒவ்வோர் ஆண்டும் புயல், மழை, வெள்ளம் ஆகிய இயற்கைச் சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.  எனவே கடலூர் மாவட்டத்தை 'பேரிடர் பாதிப்பு மாவட்டமாக' அறிவிக்க வேண்டும்.  தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கு, அதிகாரிகளுடன் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய 'மதிப்பீட்டுக் குழு'வினை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.  கடலூர் மாவட்டத்தில் கூரை வீடுகளே இல்லாத, முழு அளவில் காரை வீடுகளைக் கட்டித் தருவதற்குச் சிறப்புத் திட்டமொன்றை அரசு அறிவிக்க வேண்டும்.  தற்போதைய பாதிப்புகளை ஈடுசெய்யவும், நீண்ட கால அளவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யவும் ஏற்ற வகையில் ரூபாய் பத்தாயிரம் கோடியை இந்திய அரசு பேரிடர் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.  இப்புயலில் உயிரிழந்தோர் குடும்ப நிதியை ரூபாய் 2 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தித் தரவேண்டும் எனவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

3. பரமக்குடி துப்பாக்கி சூடு 

 கடந்த 11-9-2011 அன்று தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வில் காவல்துறையினர் நடத்திய அரச பயங்கரவாத அடக்குமுறையில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  இதனை தமிழக அரசின் தலையீடு இல்லாத வகையில் மையப் புலனாய்வுத் துறை (சி.பி.அய்.) விசாரணை நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை எழுப்பியது.  மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.  தமிழக ஆளுநரிடம் முறையீடு செய்தது.  அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மையப் புலனாய்வுத் துறை விசாரணை கோரி வழக்குத் தொடுத்தது. மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் நடைபெற்ற அவ்வழக்கில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு வன்கொடுமையை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்முயற்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். 

 அக்கொலையில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினர் அனைவரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து மையப் புலனாய்வுத் துறை தமது விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும், பரமக்குடி துப்பாக்கிச் சூடு மட்டுமல்லாமல் அதே நாளில் மதுரை சிந்தாமணி உள்ளிட்ட பிற இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வன்கொடுமைகளையும் மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

4. முல்லைப் பெரியாறு அணை

 முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கிற வழக்கின் இறுதித் தீர்ப்பை விரைந்து வழங்குவதற்கு ஏற்ற வகையில், நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் அவர்களின் தலைமையிலான விசாரணை ஆணையம்  தமது அறிக்கையை மிக விரைந்து உச்ச நீதிமன்றத்தில்  ஒப்படைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின்  இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.  அத்துடன் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு வற்புறுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

5. கூடங்குளம் அணுமின் உலை

 கூடங்குளத்தில் அணுமின் உலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. மக்களின் உணர்வுகளை மதித்து இந்திய அரசு அணுமின் உலையை இயக்கும் முயற்சியை முழுமையாகக் கைவிட வேண்டுமென இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு  கேட்டுக்கொள்கிறது.  அதாவது ஜப்பான், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு வல்லரசுகள் ஏற்கனவே தாம் இயக்கிக் கொண்டிருக்கிற அணுமின் உலைகளை ஒவ்வொன்றாக இழுத்து மூடும் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றன.  இந்நிலையில் அந்நாடுகளில் மூடப்பட்டு வரும் அணுஉலைகளின் கட்டமைப்புக் கருவிகளையும், தாதுப் பொருள்களையும் மற்றும் அணுக் கழிவுகளையும் இந்தியாவில் கொட்டிக் குவிக்கும் வகையில் இந்தியாவுடன் புதிய புதிய ஒப்பந்தங்களைப் போடுகின்றனர்.  அத்துடன் அணுமின் உலைகளில் விபத்து நேர்ந்தால் அதற்கான அனைத்து வகையிலுமான பொறுப்பு இந்திய அரசுக்கே உரியது எனவும் வல்லரசுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.  இந்நிலையில் இந்திய அரசு ஏகாதிபத்திய நாடுகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கறையில் சிறிதளவேனும் குடிமக்களின் உணர்வுகளை மதிப்பதில் காட்டவில்லை என்பது உறுதிப்படுகிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் மின்சக்தியின் தேவையை எதிர்க்கவில்லை.  மாறாக, அணுசக்தியின் எதிர்விளைவுகளைத்தான் எதிர்க்கிறது.  எனவே அணுசக்தி மூலம் மின்சாரம் என்கிற கொள்கையைக் கைவிட்டு, மாற்று மின் திட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டுமென இந்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்வதுடன், இந்தியாவில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கிற அணுமின் உலைகளையும் படிப்படியாகக் கைவிட வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

6. இனப்படுகொலை - போர்க்குற்ற விசாரணை 

 இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக  நாடுகளின் துணையோடு கூட்டு அரச பயங்கரவாதத்தை  ஏவி இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு நியமித்த விசாரணைக் குழு அண்மையில் தமது அறிக்கையை  அரசிடம் ஒப்படைத்துள்ளது.  அக்குழு இராஜபக்சேவின்  தலைமையிலான இனவெறிக் கும்பலைக் காப்பாற்றும் நோக்கத்தில், அவர்களுக்கு ஆதரவான வகையில் அறிக்கையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அய்.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் ஒரு சார்பான அவ்வறிக்கையைப் பொருட்படுத்தாமல் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென இப்பொழுதுக்குழு அனைத்துலகச் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது. 

 அத்துடன் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்களப் படை முகாம்களை  அப்புறப்படுத்தவும், சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றவும், தொடரும் அரச வன்கொடுமைகளைத் தடுக்கவும் அய்.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் மாந்தநேய  அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்குழு வற்புறுத்துகிறது.

7. தூக்குத் தண்டனை ரத்து 

 இராஜீவ்  காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள கொலைத் தண்டனையை இந்திய  அரசு கைவிட வேண்டுமெனவும் அவ்வழக்கில்  ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

8. லோக்பால் வரம்புக்குள் பெரும் வணிக நிறுவனங்கள்

 ஊழலை ஒழிப்பதற்கு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் நீதி விசாரணை அமைப்புகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு சட்டமசோதாக்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அம்மசோதா வரம்புக்குள் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனால் பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு உதவி இல்லாமல் அதேவேளையில் இந்திய அரசின் உதவியோடு இயங்குகின்ற தொண்டு நிறுவனங்களும், மிகப்பெரும் முதலீடுகளைக் கொண்டுள்ள ஊடக நிறுவனங்களும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக அமைந்துள்ளது.  ஊழலுக்குக் காரணமான பல்வேறு சக்திகளுள் இத்தகைய தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இந்நிலையில் அத்தகைய நிறுவனங்களை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவராமல் தவிர்த்திருப்பது இச்சட்டம் முழுமையானதாக அமையவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.  எனவே, கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தனியார் நிறுவனங்களையும், பதிவு செய்யப்பட்ட அதே நேரத்தில் வெளிநாட்டு உதவி பெறாத நிறுவனங்களும் உள்ளடங்கிய அனைத்துத் தொண்டு நிறுவனங்களையும், ஊடக நிறுவனங்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென இப்பொதுக்குழு இந்திய அரசை வற்புறுத்துகிறது. 

 மேலும்  மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாத வகையில் லோக் ஆயுக்தா அமைப்புகளைக் கட்டமைக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே அளிக்கும் வகையில் லோக்பால்  சட்டம் அமைய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு  கேட்டுக்கொள்கிறது.  அத்துடன் லோக்பால்  மற்றும் லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அங்க மாக இயங்கும் வகையில் அமைந்திட ஆதரவளிக்க வேண்டுமெனவும் அனைத்துக் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

9. கார்பரேட் சமூக பொறுப்பு நிதி - கண்காணிப்புக் குழு 

 இந்தியாவில்  ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.  அந்நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தில் ஒரு பகுதியை சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள கிராமங்களின் மேம்பாட்டிற்கு செலவிட வேண்டும் என்பது சட்டப்படியான கடமையாகும்.  ஆனால், அவ்வாறு அந்நிறுவனங்கள் தமது இலாபத்தில் ஒரு பங்கை கிராமப் புறங்களின் வளர்ச்சிக்குச் சட்டப்படி செலவிடுகின்றனவா என்பதைக் கண்டறிவதற்கும், கண்காணிப்பதற்கும் அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லையெனத் தெரிகிறது.  அதாவது 'காரப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி'யை (சிஷிஸி) செலவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்ற வகையில் கண்காணிப்புக் குழு ஒன்றை அரசு நியமிக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

10. இடஒதுக்கீட்டுச் செயலாக்க ஆணையம் 

 தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை அரசு  மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் முழுமையாக  நடைமுறைப்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், மைய  மற்றும் மாநில அரசுகள் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை.  இதனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலை நீடிக்கிறது.  தேர்தல் காலங்களில் அரசியல் ஆதாயம் கருதி காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்படுவதும், பின்னர் அவ்வறிவிப்பை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பிலே போடுவதும் வாடிக்கையாக உள்ளது.  மைய, மாநில அரசுகளின் இத்தகைய மோசடிப் போக்குகளை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கென இடஒதுக்கீட்டு செயலாக்க ஆணையம் ஒன்றை நிறுவ வேண்டுமென மைய, மாநில அரசுகளை இந்தப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

11. தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கான ஆணையம்    

 மகளிர்  ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் மனித  உரிமைகள் ஆணையம் ஆகியவை தமிழகத்தில் அமையப்பெற்று இயங்கி வருகின்றன.  ஆனால் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கான ஆணையம் அமைக்கப்படவில்லை.  நீண்ட காலமாக இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.  எனினும், தமிழக அரசு அதனை ஒருபொருட்டாகக் கருதவில்லை என்பது வேதனையளிக்கிறது. 

 இந்நிலையில், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கான தமிழக அளவிலான  ஆணையத்தை உடனடியாக நிறுவ வேண்டும்  
என்று இப்பொதுக்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.  பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுத் தொகுப்பிலிருந்து இசுலாமியர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்வதென இந்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.  இந்திய அளவில் 16 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்ட இசுலாமியருக்கு நான்கில் ஒரு பங்கு அளவே இடஒதுக்கீடு அளிப்பது என்கிற முடிவு அம்மக்களை ஏய்க்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.  கிறித்துவத்தைத் தழுவிய தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அத்தகைய உள்ஒதுக்கீட்டையும் வழங்க இயலாத நிலையில் இந்திய அரசு அம்மக்களின் கோரிக்கையை புறந்தள்ளி வருகிறது.  இதற்கு உச்ச நீதிமன்றத்தின் இடஒதுக்கீடு தொடர்பான 50 விழுக்காடு வரம்பு என்னும் ஆணையே காரணமாக அமைந்துள்ளது.  எனவே, சமூக நீதியில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தடுக்கும் வகையில் இந்திய அரசு வலுவான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

12. காவல் நிலைய வன்கொடுமைகள் - தண்டிக்க புதிய சட்டம்

 தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் குறவர், இருளர் போன்ற  பழங்குடியினர் திட்டமிட்ட பொய் வழக்குகளுக்கு இலக்காவதும், விசாரணை எனும் பெயரில் சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்தல், கொலை செய்தல், பாலியல் வன்கொடுமைகள் செய்தல் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதும், படுகொலைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது.  இத்தகைய அரச வன்கொடுமைகளில் ஈடுபடும் காவல்துறையினர் மீது அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்காத நிலை தொடர்கிறது.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இப்போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், காவல்நிலைய வதைகள் மற்றும் படுகொலைகளைத் தடுக்கும் வகையிலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறையினரைத் தண்டிக்கும் வகையிலும் புதிய சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனவும், அதற்கென தனி நீதி விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டுமெனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

13. பால் விலை, பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் உயர்வு

 அடித்தட்டு  மக்களை வெகுவாகப் பாதிக்கும் வகையில் பால் விலை, பேருந்துக் கட்டணம் மற்றும் மின்கட்டணம் ஆகியவற்றை அண்மையில் தமிழக அரசு மிகக் கடுமையான அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.  ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் இத்தகைய விலை உயர்வு மற்றும் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

14. பஞ்சமி நில மீட்பு  ஆணையம்

 தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கென ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அனைத்தும் ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன.  தமிழகமெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறியவும் அவற்றை மீட்டு உரியவருக்கு ஒப்படை செய்யவும் தமிழக அரசு ஏற்கனவே நியமித்துள்ள பஞ்சமி நில மீட்பு ஆணையம் முறையாக இயங்க அனுமதிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 

15. மணல் அள்ளத் தடை

 ஆறு, ஏரி, குளம், குட்டை போன்றவை நாடு தழுவிய  அளவில் ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகியிருக்கின்றன.  மேலும் ஆற்று மணல் அரசின் அனுமதியோடு சூறையாடப்படுகிறது. இதனால் இயற்கை வாழ்வாதாரங்கள் மிகக் கடுமையான  அளவில் பாதிப்படைந்துள்ளன.  எனவே, மணல்  அள்ளுவதற்குரிய அரசு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும்.  மணல் அள்ளுவதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் எனவும், நீர்ப் பிடிப்புகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

16. முழுமையான மது விலக்கு  

 சேரி மற்றும் குப்பங்களில் டாஸ்மாக் என்னும் அரசு  மதுக்கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.  இது அடுத்தடுத்த தலைமுறைகளை வெகுவாகப் பாதிக்கும்.  எனவே மதுவிலக்குக் கொள்கையைத் தீவிரப்படுத்தி அரசு சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

17.  2012 - எழ்ச்சிதமிழர் பொன்விழா ஆண்டு

 விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  அவர்களின் 50ஆவது பிறந்த நாளையட்டி, 2012ஆம்  ஆண்டை பொன்விழா ஆண்டாக கொண்டாடுவது  என்றும், அதனையட்டி வருகிற ஆகத்து 17 தமிழர்  எழுச்சி நாளன்று மாபெரும் அரசியல் மாநாடு  நடத்துவது என்றும், அந்நாளில் விடுதலைச் சிறுத்தைகளுக்கென  தொலைக்காட்சி ஊடகம் ஒன்றைத் தொடங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதெனவும் இக்குழு தீர்மானிக்கிறது.

18. புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

 மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமை நிர்வாகப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அதற்குரிய விண்ணப்பங்களை 6-1-2012 முதல் 31-1-2012 வரை உரிய கட்டணத்துடன் பெறுவது எனவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.  அத்துடன், பிப்ரவரி மாத இறுதிக்குள்ளாக அனைத்துப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கட்சித் தலைவரின் நியமன முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது எனவும் இப்பொதுக்குழு உறுதியேற்கிறது. 

1 கருத்துகள்:

வணக்கம்.விடுதலைச்சிறுத்தைகள் தீர்மானத்தைப்படித்தேன்.நன்று.வாழ்த்துகள்.தீர்மானம் 10,17,இரண்டையையும் நாம் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.ஒவ்வொரு ஆதிதிராவிடர், பள்ளர், பறையர் குடும்பத்தில் படித்த தோழருக்கு அரசு நிறுவனங்களில் ஒருவருக்காவது ஒருவேலை கிடைத்திட வழிகான,இடஒதுக்கீட்டுச் செயலாக்க ஆணையம்,ஒளிமயமான எதிர் காலத்தைக் காணலாம்.தீர்மான்ம்17,பொன்விழா ஆண்டில், நமக்கென்ற ஊடகம் இருப்பது சாலச்சிறந்தது.நமது உழைப்பும், ஆதரவும் தேவைப்படும் போது மட்டுமே திருமாவைக்காட்டுவதும், நமதுகொடிகளை நம்மக்கள்ழோடு தொலைக்காட்சிகள் வேடிக்கை காட்டும் அவலநிலை இனிநமக்கு வேண்டவே ! வேண்டா.தங்களின் தன்னலமற்ற தொண்டுகள் தொடர எனது பணிவன்பான வாழ்த்துகள்.

6 ஜனவரி, 2012 அன்று 7:43 PM comment-delete

கருத்துரையிடுக