எழுச்சித்தமிழரின் பொங்கல் வாழ்த்துக்கள்


தமிழீழத்தை வென்றெடுக்கவும் 
தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் 
பொங்கல் நாளில் உறுதியேற்போம்!


தமிழினத்தின் தனிச் சிறப்பான விழா பொங்கல் திருவிழாவாகும்.  உழவுத் தொழிலுக்கும் உழவர் பொதுமக்களுக்கும் சிறப்புச் செய்யும் ஒரே விழா உலகில் பொங்கல் திருவிழாவே ஆகும்.  பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற பொன்மொழிக்கேற்ப 'போகித் திருநாளும்' ஞாயிறு போற்றுதும் ஞாயிறு  போற்றுதும் என்பதற்கேற்ப கதிரவனை வழிபடும் வகையில் 'பொங்கல் விழா'வும், வேளாண்மைத் தொழிலையும் அதற்குப் பெருந் துணையாய் இருக்கும் எருதுகளைப் போற்றும் வகையில் 'மாட்டுப் பொங்கல் விழா'வும், வயதில் மூத்தோரைக் கண்டு வணங்கி அவர்களின் வாழ்த்துகளைப் பெறும் வகையில் 'காணும் பொங்கல் விழா'வும் ஒருங்கிணைந்து கொண்டாடப்படும் தமிழர்களின் பெருவிழாவான திருவிழாவே பொங்கல் விழாவாகும்.

இயற்கையோடு இயைந்து  தமது வாழ்வைத் தகவமைத்துக்கொண்ட தமிழினம், காலத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதனடிப்படையில் தமது பண்பாட்டு நெறிகளையும் வரையறுத்துக் கொண்டது.  அதன்படியே தை முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டு நாளாகக் கொண்டாடி வந்தது.  'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதுவும் இத்தகைய பண்பாட்டு நெறிமுறைகளின்படி வந்த வழக்குமொழியேயாகும்.  தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழர்கள் இன்று தமது போற்றுதலுக்குரிய பழங்காலத்துப் பண்பாட்டு அடையாளங்களை இழந்து, வடஇந்தியக் கலாச்சாரம் மற்றும் மேலைநாட்டுக் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஆட்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களை மீட்பதற்காகக் கடந்த காலங்களில் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  தமிழ்க் கடல் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள் 1920களின் தொடக்கத்தில் ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளை இணைத்து அதனையே திருவள்ளுவராண்டாகவும், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாகக் கொண்டாட வேண்டுமெனவும் தமிழ் உலகத்திற்கு அறிவிப்புச் செய்தனர்.  அதன்படி தை முதல் நாளையே நாம் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம் என்றும் தமிழினத்தின் ஒரே பண்பாட்டு அடையாளமாக இருக்கிற பொங்கல் திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம் என்றும் இனமான உணர்வுள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.

ஈழத் தமிழினத்தின் அவலம் இன்னும் துடைக்கப்படாத நிலையில், சிங்கள இனவெறியர்களால் ஈழ மண்ணில் திணிக்கப்படும் கலாச்சாரச் சீரழிவுகளைத்  தடுக்க இயலாத நிலையில் பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகளால் அறிவிக்க இயலவில்லை. 

மேலும் அண்மையில் வீசிய 'தானே' புயலால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்கள் அகதிகளாக உருவாகியுள்ள நிலையில், அவர்களுக்குரிய இழப்பீடு மற்றும் மீட்புப் பணிகள் ஏதும் இதுநாள் வரையில்  சரிவர கிடைக்கப்பெறவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.  அத்துடன், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலால் மதுரை, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் எதிர்காலம் மாபெரும் கேள்விக்குரியாகியுள்ளது. 

எனினும், தமிழினத்தின் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் உலகம் தழுவிய அளவில் பொங்கல்விழாவைக் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

சாதி, மதங்களின் பெயரால் நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராடவும், தமிழீழத்தை வென்றெடுக்கவும், மண்ணுரிமை, நீர் உரிமை உள்ளிட்ட தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் இப்பொங்கல் நாளில் உறுதியேற்போம்.



இவண்

 (தொல். திருமாவளவன்)

1 கருத்துகள்:

NANTRI THAMILAA.

15 ஜனவரி, 2012 அன்று 10:10 AM comment-delete

கருத்துரையிடுக