தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க தொல். திருமாவளவன் அழைப்பு!

திசம்பர் 26 Š மாநாடு

தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க 
தொல். திருமாவளவன் அழைப்பு!

உலகெங்கும் வாழ்கிற ஒட்டுமொத்தத் தமிழினத்தின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி வருகிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழீழ மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது. "பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம்' என்கிற பெயரில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற உலக நாடுகளின் துணையோடு சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொடூரமாக நசுக்கிறது. முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த போரில், குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டுமே பல்லாயிரக் கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது. இந்நிலையில், சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் தமிழின விரோதக் கொடுமைகளையும் துணைநின்ற நாடுகளின் போக்கையும் கண்டித்து பல்வேறு போராட்டங்களையும் பேரணிகளையும் மாநாடுகளையும் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தியுள்ளது. கருத்துரிமை மாநாடு, தமிழீழ அங்கீகார மாநாடு, எழும் தமிழ் ஈழம் மாநாடு ஆகிய மாநாடுகளை நடத்தியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது தமிழர் இறையாண்மை மாநாட்டை 26.12.2010 அன்று மறைமலைநகரில் நடத்துகிறது. ஈழத் தமிழர்களின் ஒரே வேட்கையான "தமிழீழ விடுதலை' யை சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழத்தை மீட்டெடுக்க உலகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென்றும் அறைகூவல் விடுக்கிற நோக்கில் நடத்தப்படும் மாநாடே இம்மாநாடாகும்.

தமிழர் என்னும் ஒரு தேசிய இனம் உலக அளவில் ஏறத்தாழ பத்துக்கோடிப் பேர் வாழ்ந்து வரும் நிலையில், தமிழினத்திற்கென்று ஒரு நாடு இந்த மண்ணுலகில் வேண்டுமென்கிற கோரிக்கை மிகவும் சனநாயகமான ஒன்றாகும். சில இலட்சம் மக்கள் தொகை கொண்ட இனத்திற்கெல்லாம் தனிநாடு, அரசு, இறையாண்மை போன்றவை சர்வதேசச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இதே தமிழினத்திற்கென்று ஒன்றுக்கும் மேற்பட்ட இறையாண்மையுள்ள நாடுகளும் அரசுகளும் இருந்துள்ளன என்பதை வரலாற்றில் காணலாம். அதாவது, நாடு, அரசு மற்றும் இறையாண்மை போன்ற சிறப்புக்களைப் பெற்ற இனமாக வாழ்ந்த தமிழினம் இன்று, உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஆளப்படும் இனமாக, கொத்தடிமைகளாக, உழைக்கும் இனமாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்தான், இலங்கைத் தீவில், பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அரை நூற்றாண்டுக் காலம் அறவழியிலும் ஆயுத வழியிலும் ஈழத் தமிழர்கள் போராடினர்.

ஆனால், அப்போராட்டத்தின் ஞாயத்தையும் சனநாயகத்தையும் மூடி மறைத்துவிட்டு, பயங்கரவாத முத்திரைக் குத்தி, திட்டமிட்ட ஒடுக்குமுறையால் நசுக்கிவிட்டனர். இந்நிலையில், தமிழீழ விடுதலைக்கான அரசியலை அடைகாப்பதும், அக்கருத்தியலை, சர்வதேசச் சமூகத்தினிடையில் பரப்பிட வேண்டியதும் ஒவ்வொரு தமிழனின் கடமை என்கிற உணர்வோடு விடுதலைச் சிறுத்தைகள், இம்மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி, தமிழ்த் தேசிய உணர்வுள்ள யாவரும் இம்மாநாட்டில் வெகுவாகப் பங்கேற்று சிறப்பித்திட வேண்டுகிறேன்.

மாநாட்டுக்கு வருகைதரும் விடுதலைச் சிறுத்தைகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், போக்குவரத்தின்போது மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்திட வேண்டுகிறேன். உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்கிற வகையில் இம்மாநாடு வெற்றிகரமான மாநாடாக அமைத்திட வேண்டும். ஒவ்வொரு முகாமிலிருந்தும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இடைக்காலமாக ஈழத்தில் நாம் போர்க்களத்தை இழந்தாலும், இன்னும் போர்க் குணத்தை இழந்திடவில்லையயன்பதை உறுதிப்படுத்தும் மாநாடாக இது அமைந்திட வேண்டும். மாநாட்டுக்கு வருவோர், வண்டிகளின் கூரைகளில் அமரவோ, பொதுமக்களுக்குச் சங்கடத்தை உருவாக்கும் வகையிலான முழக்கங்களை எழுப்பவோ கூடாது என்றும், மது உள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ளவர்களை உடன் அழைத்துவரக் கூடாது என்றும், காழ்ப்புணர்வு கொண்ட சமூகவிரோதிகள் ஊடுருவ எவ்வகையிலும் இடமளித்துவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர் இறையாண்மையை வென்றெடுப்போம்! தமிழினத்தின் தன்மானத்தைப் பாதுகாப்போம்!




1 கருத்துகள்:

all these are absolutely wonderful, spirited and emotive but these activities are not directly going to enable the harijans of Tamil Nadu to get out of oppression and discrimination until they bring a huge transformation to consider leaving the caste based Hindu fold and become Muslims, this are not my views but the views of Father Periyar, Even Christianity is a failure, I have seen in Periyavarsillai church Christian dalits being segregated and sitting separately, It was Islam who liberated the dalits of tamil Nadu.

1 ஜனவரி, 2011 அன்று 8:37 AM comment-delete

கருத்துரையிடுக