"பிறருக்காக வாழ்வோம்!'' தொல். திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
உழைக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளிவீசிட, மகிழ்ச்சி பொங்கிட வழிகாட்டியாக வாழ்ந்த மகான்களில் இயேசு பெருமானும் ஒருவர். அந்த மகானின் பிறந்த நாளான திசம்பர் 25 ஆம் நாளை உலகமே வண்ண வண்ண விளக்குகள் ஒளிவீசிட, இனிப்புகள் வழங்கி உவகை பொங்கக் கொண்டாடி மகிழ்கிறது.
சுரண்டிக் கொழுக்கும் ஆளும் வர்க்கத்தினரிடமிருந்து உழைக்கும் அப்பாவி மக்களைப் பாதுகாத்திடவும், அவர்களைத் துன்ப வாழ்விலிருந்து மீட்டிடவும் இயேசு பெருமான் சிலுவையைச் சுமந்தார். பிறருக்காக எத்தகைய துன்பத்தையும் இன்முகத்துடன் ஏற்க வேண்டுமென்கிற வாழ்க்கைத் தத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துகிறார்.
தான் மட்டுமே வாழ வேண்டுமென்கிற தன்னலத்தால் ஒருவன் சுமக்கும் துன்பம் கொடூரமானதாக அமையும். ஆனால், மற்றவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக, ஒருவன் சுமக்கும் துன்பம் பேரின்பத்தை அளிக்கும் என்ற வாழ்வியல் உண்மையை உலகுக்குச் சொன்னவர் மகான் இயேசுபெருமான் ஆவார். அத்தகைய மகான் வழியில் அனைவரும் பிறருக்காக வாழுவோம்! அதுவே மானிடனாய் பிறந்ததற்கான பெரும்பயனைப் பெற்றதாக அமையும் என்பதை உலகப் பெருவிழா நாளான கிறிஸ்துமஸ் திருநாளில் நினைவுபடுத்தி, அனைத்துக் கிறித்தவப் பெருங்குடி மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக