தோழர்.செங்கொடியின் அரை உருவச் சிலையினை திருமாவளவன் திறந்துவைத்தார்


பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென வலியிறுத்தி 28.08.2011 அன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரே தீக்குளித்து உயிர் நீத்த வீர மங்கை செங்கொடியின் உடல் காஞ்சிபுரம் அருகே உள்ள மங்கள்பாடி கிராமத்தில் (31.08.2011)  அன்று ஆறரை மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சி மக்கள் மன்றம் என்னும் அமைப்பைச் சார்ந்த தோழர் செங்கொடி தங்கி படித்து களப்பணியாற்றிய மங்கள்பாடி கிராமத்தில் மக்கள் மன்றத்தின் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் 29,30,31 ஆகிய மூன்று நாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

கடந்த மூன்று நாட்களும் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அணியணியாய் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.

29.08.2011 அன்று தோழர் செங்கொடியின் உடல் காஞ்சிபுரம் மருத்துவமனையிலிருந்து மங்கள்பாடி வரையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 

அவ்வூர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அதை போல இன்று இறுதி அடக்கத்தை ஒற்றி பல்லாயிரக் கணக்கானவர்கள் மங்கள்பாடி கிராமத்தில் குவிந்தனர். 

தோழர்.செங்கொடியின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் நூற்றுக்கணக்கானவர்களுடன் ஊர்வலமாக வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் பொதுசெயலாளர் சிந்தனைச் செல்வன் அவர்களும்,மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன், மாநிலப் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் எழில்கரோளின், வழக்கறிஞர் பார்வேந்தன், வன்னியரசு,மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் , இளஞ்சேகுவேரா, சங்கத்தமிழன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், பா.ம.க தலைவர் கோ.க.மணி, கொளத்தூர் மணி, கவிஞர் காசியானந்தன், இயக்குனர் சீமான், ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, அறிவுமதி, பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் பல்வேறு அமைப்புகளின் தொண்டர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் இரங்கல் உரையாற்றினர்.


நிறைவாக தோழர்.செங்கொடியின் அரை உருவச் சிலையினை தலைவர் தொல்.திருமாவளவன்  அனைத்து தலைவர்களின் முன்னிலையில் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று சில நொடிகள் அமைதிகாத்து அகவணக்கம் செலுத்தினர்.

 பின்னர் அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மங்கள்பாடி கிராமத்திற்குள்ளேயே அங்கு அமையப்பட்டுள்ள சமூக கூடத்தின் எதிரே தோழர்.செங்கொடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் கலந்துக் கொண்டு செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

கலந்துக்கொண்ட அனைவரும் எழுப்பிய வீரமுழக்கங்கள், மக்கள் மன்றத்தைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் பொறுப்பாளர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு வந்து அஞ்சலி செலுத்திய நிகழ்வு மிகவும் சிலிர்ப்பூட்டுவதாக அமைந்திருந்தது. கூடியிருந்தவர்களில் ஏராளமானவர்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கண்கலங்கி அழுதகாட்சி நெஞ்சை பிசைவதாக அமைந்தது.

கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒற்றுமையாய் இணைந்து தோழர்.செங்கொடிக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு ஒரு புதிய வரலாறாக அமைந்தது. கனத்த நெஞ்சோடு கலைய மனமில்லாமல் அனைவரும் கலைந்துச் சென்றனர். 

காஞ்சி மக்கள் மன்றத்தின் அமைப்பாளர் தோழர்.மகேஷ் தாளமுடியாத துக்கத்தோடு அனைவருக்கும் விடைகொடுத்து வழியனுப்பிவைத்தார்.

கரும்புலி முத்துக்குமாரின் வரிசையில் தோழர்.செங்கொடியும் தமிழகத்து கரும்புலியாய் தமிழ் தேசிய வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துக் கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக