மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


Photo : koodalbala
கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கிருக்கும் அணுஉலையை நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் அணு உலையை மூடவேண்டும் என்று எழுச்சியோடு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மேலும் ஒரு அணுஉலையை அங்கே கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக ரஷ்ய நாட்டோடு செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உண்ணாநிலை அறப்போராட்டத்தை அந்தப் பகுதியில் வசிக்கும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அண்மையில் ஜப்பானிலும், பிரான்சு நாட்டிலும் அணுஉலைகளில் நேர்ந்த விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கூடங்குளம் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டு அணுஉலை விபத்துக்குப் பிறகு இத்தாலி, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் புதிதாக அணுஉலை எதையும் கட்டுவதில்லை என்றும், இருக்கின்ற அணுஉலைகளைப் படிப்படியாக மூடிவிடுவதென்றும் முடிவு செய்துள்ளன. உலகளாவிய மனநிலை இப்படி இருக்கும்போது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் மேலும் மேலும் அணுஉலைகளை இந்திய அரசு கட்டிவருகிறது. மேலை நாடுகளில் காலாவதியான தொழில்நுட்பத்தைப் பல்லாயிரம் கோடிப் பணத்தைக் கொடுத்து இந்திய அரசு வாங்கி வருகிறது. இந்திய ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு மக்கள் விரோதிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

கூடங்குளத்தில் கட்டப்பட்டுவரும் அணுஉலையை டிசம்பர் மாதம் தொடங்கப் போவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த அணுஉலைக்கு பேச்சிப் பாறை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதாக முன்பு திட்டமிட்டிருந்தார்கள். 2006ஆம் ஆண்டு அது தொடர்பாக நடத்தப்பட்ட பொது விசாரணையில் விடுதலைச் சிறுத்தைகளும் கலந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்ததையயாட்டி அந்தத் திட்டத்தை மாற்றி, தற்போது கடல்நீரைச் சுத்தப்படுத்தி அணுஉலைக்கு குளிர்விப்பானாகப் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு கடல்நீர் பயன்படுத்தப்பட்டால் கூடங்குளத்தையயாட்டி பலநூறு கிலோ மீட்டர் பரப்பளவுக்கு மீன்பிடித் தொழில் முற்றாகப் பாதிக்கப்படும். மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

இவ்வாறு பல வகையிலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை முற்றாகக் கைவிடுவது ஒன்றுதான் இந்திய அரசுக்கு நல்லது. மக்களின் போராட்டங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டங்களுக்கும் மதிப்பளித்து உடனடியாக அணுஉலைத் திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறோம்..

இவண்
 (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக