பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மதுரையில் திருமாவளவன் பேட்டி

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று மதுரையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அதன் தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று மதுரை வந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பரமக்குடி படுகொலைச் சம்பவம் குறித்து அரசு நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது. இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசியல் சார்பு இல்லாத சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அ.தி.மு.க. அரசு ரூ.1 லட்சம் அறிவித்து உள்ளது.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் தலித் மக்கள் பாதிக்கப்பட்டாலே ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதை மதிக்காமல் அரசு ரூ.1 லட்சம் அறிவித்து உள்ளது. ராமநாதபுரத்தில் இன்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே பொதுமக்கள் போலீசாரால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே 144 தடை உத்தரவை காவல்துறை திரும்பபெற வேண்டும். பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். ஆனால் துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களை நேரில் பார்த்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ராம் விலாஸ் பஸ்வான் ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் வருகிற 24-ந்தேதி நாக்பூரில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளார்.
தேசிய தலித் முன்னணி இயக்கத்தின் துணைத் தலைவராக இருப்பதால் நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன். பின்னர் நாங்கள் இருவரும் பிரதமரிடம் மனு கொடுக்க உள்ளோம். தியாகி இமானுவேல்சேகரன் குருபூஜையையொட்டி அடிக்கடி திட்டமிட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும். அப்போது அசம்பாவிதங்கள் குறையும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற நிலைபாட்டில்தான் விடுதலை சிறுத்தை கட்சியும் உள்ளது. எனவே தமிழக அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக