3 நாட்களாக கடலூர் மற்றும் புதுவையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார் ! புயலில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் நிதிஉதவி !

டிசம்பர் 29 ஆம் தேதி இரவு தானே புயல் தமிழக கடலோர மாவட்டங்களை கடுமையாக தாக்கியது. குறிப்பாக கடலூர் மாவட்டமும் புதுச்சேரியும் கடும் பாதிப்புக்குள்ளானது.

3000த்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் மரங்களும் வேரோடு சாய்ந்ததால் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடிசை வீடுகளும் ஒட்டு வீடுகளும் புயலில் இடிந்து தரைமட்டமானதால் அவர்கள் பள்ளிகூடங்களிலும் திருமண மண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தானே புயலில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த 3 நாட்களாக (1.1.2012, 3.1.2012, 4.1.2012) கடலூர் மாவட்டத்தில் புயலால் ஆன சேதங்களை ஆய்வுசெய்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் உயிரிழந்தோரின் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் அவர்கள் “தமிழக அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 இலட்சம் வழங்குவதாக அறிவித்திருகிறது. அதை 5 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக முதலவர் அவர்களை கேட்டுகொள்கிறோம். மின்இணைப்பை விரைந்து ஏற்படுத்துவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கனக்கான மக்கள் பள்ளிகூடங்களிலும் திருமண கூடங்களிலும், பொது இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும் தஞ்சம் அடைந்திருக்கிற நிலை ஏற்பட்டிருகிறது. ஆகவே உணவு உடை போன்ற உடனடி தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் அரசு மிகத்தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளையும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் முன்தொகையாக வழங்க வேண்டும் அப்போது தான் இந்த பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க முடியும்.
தமிழக அரசு இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் கூரை வீடுகளே இல்லாத அளவிற்கு அனைவருக்கும் காரை வீடுகள் கட்டி தர வேண்டும், இப்போது உடனடி நிவாரணம் ஐயாயிரம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது அதை இருபத்தைந்தாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், சுனாமியில் ஏற்பட்ட பாதிப்புகளை போல இந்த புயல் தாக்குதலினால் ஏற்பட்டிருகிறது எனவே இதை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட அணைத்து பகுதிகளுக்கும் இந்திய அரசு போதிய நிதி உதவி செய்ய வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு இலட்சம் மரங்களாவது வேரோடு சாய்ந்திருக்கும் அதனால் அம்மாவட்டத்தில் மரங்களை நடுவதற்குரிய சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 33.33% ஒரு மாநிலத்தில் வனப்பகுதியாக இருக்க வேண்டும் என்பது வனதேசிய கொள்கையின் படி அரசு அறிவித்திருகிறது ஆனால் கடலூரில் ஐந்து சதவீதமும், தமிழத்தில் பதினேழு சதவீதமும் தான் வனப்பகுதி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது,ஆகவே தமிழகத்தை 33% வனப்பகுதி உள்ள மாநிலமாக மாற்றுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.
 
1.1.2012 ஆங்கில புத்தாண்டு அன்று காலை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரியில் தானே புயலால் உயிரிழந்த குப்புசாமியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லியதுடன் உதவி தொகையாக ரூ.10,000 வழங்கினார். சிதம்பரம் அருகிலுள்ள கீரப்பாளையத்திற்கு சென்றவர் அங்கே அமைந்துள்ள நீர்ஏற்றும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து செங்கமேடு, நஞ்சமகத்துவாழ்க்கை, அகரம் காலனி, குத்தாபாளையம்,சேந்திரகிள்ளை, தச்சக்காடு ஆகிய ஊர்களுக்கு சென்று புயலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உதவித் தொகையாக தலா ரூ.10,000 வழங்கினார்.
3.1.2012 அன்று தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெண்ணிடம் பகுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் பாளையங்கோட்டை என்னும் ஊரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி பத்தாயிரம் ருபாய் நிதியளித்தார். பின்னர் சோழதரம் வழியாக வீராரெட்டிகுப்பம் என்னும் இடத்திற்கு வந்தவர் அங்கு நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பின்பு பூவாலையில் மழையில் வீடு இடிந்து உயிரிழந்த மகாலட்சுமியின் குடும்பத்திற்கு ரூபாய் ஐயாயிரம் நிதிஉதவி அளித்தார். பின்னர் முற்றூர்,பிச்சாவரம், சின்னவாய்க்கால், பட்றையடி கிராமம், கிள்ளை ஆகிய பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்தார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் வித்தியாதித்தன் ஆகியோர் தொல்.திருமாவளவன் அவர்களை கிள்ளை பேரூராட்சியில் சந்தித்தனர். கிள்ளை பகுதி முழுவதும் உடனடியாக குடி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய கேட்டுகொண்டார். அப்போது விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி நிர்வாகிகள் திருமாறன், தாமரைச் செல்வன், பாலஅறவாழி, செல்லப்பன், செல்வமணி,கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
 
4.1.2012 அன்று தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடலூர் நகரத்தில் பெரிய கங்கனாங்குப்பம், வில்வநகர், புதுகுப்பம் காலனி, எஸ்.ஆர் காலனி, செல்லங்குப்பம் ஆகிய பகுதிகளுக்கும் புதுச்சேரியில் அபிசேகப்பாக்கம், டி.என் பாளையம் ஆகிய இடங்களுக்கும் சென்று தானே புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வுசெய்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக