இளவரசன் சாவை குற்றப் புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும்!
தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் 144 தடையாணையை திரும்பப் பெறவேண்டும்!
ஆசிரியர் தகுதித் தேர்வு - அரசாணை 252-ஐ முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு இன்று (26-7-2013) காலை 10 மணியளவில் சென்னை, வேளச்சேரியிலுள்ள தாய்மண் அலுவலகத்தில் நடைபெற்றது.  கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தருமபுரி இளவரசன் சாவைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த வேண்டுகோளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு நீதிவிசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பதுடன் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  அதேவேளையில், நீதி விசாரணையானது நீதியரசர் சிங்காரவேலு அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டிருப்பதற்கு மாற்றுக் கருத்து எழுந்துள்ளது.  இதனை தமிழக அரசு மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.  அத்துடன், இந்த நீதி விசாரணை இளவரசன் இறப்பை மட்டுமே முன்னிறுத்தாமல், திவ்யா-இளவரசன் ஊரைவிட்டு வெளியேறிய 2012 அக்டோபர் 8ஆம் நாளிலிருந்து அதனைத் தொடர்ந்து நடந்த சாதிவெறியாட்டங்கள், திவ்யா தந்தை நாகராஜன் சாவு, இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரித்து கடத்தியது, 4-7-2013 இளவரசன் சாவு வரையில் நடைபெற்ற அனைத்துப் பின்னணிகளையும் முழுமையாக விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

2. தருமபுரி இளவரசன் சாவில் ஏராளமான ஐயங்கள் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை வல்லுநர்களாலேயே எழுப்பப்பட்டுள்ளன.  அது தற்கொலைதான் என ஐயத்திற்கிடமின்றி உறுதியாகத் தெரிவித்திட இயலாத நிலை உள்ளது.  விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரையில் அது படுகொலைதான் எனக் கருதுகிறோம்.  இந்நிலையில், அது படுகொலை இல்லை என்று அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.  தமிழகத்தையே உலுக்கியிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை என்பதால் இளவரசன் சாவை அறிவியல்பூர்வமான முறையில் குற்றப்புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் புலனாய்வு நடத்திட ஆணையிட வேண்டுமென்றும் தமிழக அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

3. அண்மைக் காலமாக சாதியவாத சக்திகள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் வெளிப்படையாக சாதிவெறியைத் தூண்டும்படி செயல்பட்டு வந்தனர்.  தருமபுரி, மரக்காணம் உள்பட வடமாவட்டங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.  இதனால் தமிழக அரசு கடந்த சில மாதங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் 144-வது பிரிவின்படி தடையாணை பிறப்பித்துள்ளது.  சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வன்முறைகளுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத விடுதலைச் சிறுத்தைகளுக்கு, குறிப்பாக கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நுழையவே கூடாது எனத் தடை விதித்திருப்பது முற்றிலும் சனநாயகத்துக்கு விரோதமானதாகும்.  அத்துடன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அவருக்கான உரிமைகளையும் இந்த ஆணை பறித்துள்ளது.  மேலும் தருமபுரி இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடாமலும் தடைவிதித்து சனநாயகத்தை நசுக்கியுள்ளது.  தமிழக அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், தமிழக அரசு இரு மாவட்டங்களிலும் விதிக்கப்பட்டுள்ள 144-தடையாணையை உடனடியாகத் திரும்பப் பெற்று சனநாயகத்தைப் பாதுகாத்திட முன்வரவேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

4. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய இந்திய அரசு முனைந்தபோது அவ்வாறு விற்பனை செய்யக்கூடாது எனக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததோடு, விற்பனை செய்வதைத் தவிர்க்க இயலாத நிலை இருப்பின் அதனைத் தமிழக அரசுக்கே விற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்தது.  எமது கோரிக்கையை ஏற்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக முன்வந்து தானே வாங்கிக்கொள்வதாக இந்திய அரசுக்கு மடல் எழுதியது.  அதன்படி, தற்போது தமிழக அரசு அதனைப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இந்தியாவுக்கே ஒரு முன்னோடியாக வழிகாட்டியுள்ளது.  இதன் மூலம் பொதுத்துறைகளை மெல்ல மெல்ல தனியார்மயப்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் இந்த முன்மாதிரியான நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது. 

5. வரும் ஆகஸ்ட் 17, 18 ஆகிய நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்த தமிழக அரசு அறிவிப்புச் செய்துள்ளது.  அத்தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்களே தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்று அரசாணை எண் 181-ல் கூறப்பட்டுள்ளது.  அத்துடன், கல்வித் தகுதியின் அடிப்படையில் ‘வெயிட்டேஜ்’ என்னும் பெயரில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசாணை எண் 252-ன்படி அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்விரு அரசாணைகளும் எளிய மக்களுக்கு மறைமுகமாக சமூகநீதியை மறுக்கும் சதி முயற்சியாகவே அமைந்துள்ளது.  தலித்துகள்-பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு அரசாணை எண் 252-ஐ முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போல, தலித்துகள்-பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்ணில் தளர்வு அளிக்கும் வகையில் அரசாணை எண் 181-ஐ திருத்தம் செய்ய வேண்டும் எனவும் இம்மாநிலச் செயற்குழு தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.  

6. ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதற்கான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1ஆம் நாள் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாகக் கலந்துகொள்வது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

7. ‘டெசோ’ அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8ஆம் நாள் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.  குறிப்பாக, கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திருவள்ளூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.  அப்போராட்டத்தில் திமுக, திக ஆகிய கட்சித் தோழர்களுடன் இணைந்து செயலாற்றிட வேண்டுமென திருவள்ளூர் மாவட்டத் தோழர்களுக்கு இச்செயற்குழு வழிகாட்டுகிறது.

8. எதிர்வரும் செப்டம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன் வெல்த் நாடுகளின் கூட்டத்தை அங்கே நடைபெறவிடாமல் தடுப்பதற்கு இந்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.  அதேவேளையில், இம்மாநாட்டைத் தடுத்திட இயலாதநிலை இருப்பின், அம்மாநாட்டில் இந்திய அரசு கலந்துகொள்ளாமல் தவிர்க்க வேண்டுமென இந்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9. ஈழத்தில் வடக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களும் வாக்களிக்க உரிமை வழங்கிட இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
காவியக் கவிஞர் வாலி காலமாகிவிட்டார் என்பது திரையுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும். கடந்த அறுபது ஆண்டு காலமாக திரையுலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் நிலைத்து நின்று பெரும் புகழ்பெற்ற பேராண்மையாளராக விளங்கிய வாலி அவர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.  எனது ஐம்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது நடைபெற்ற கவியரங்கத்திற்குத் தலைமையேற்று கவிதைபாடி எனக்குப் பெருமை சேர்த்தார்.  நெஞ்சோடு அணைத்து என்னை நெகிழ வைத்தார்.  அந்த நினைவுகள் என்றும் மறக்க இயலாதவை. அவரது மறைவால் என் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற ஒரு வெறுமையை உணர்கிறேன்.  அந்த அளவுக்கு அவர் என் மீது காட்டிய வாஞ்சை என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துள்ளது.

அவருடைய இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழினத்துக்கே பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் திரை உலகத்தினருக்கும் இலக்கிய உலகத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  வாலிபக் கவிஞர் வாலி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

அய்.நா மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்டுள்ள சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கும் என 19.03.2012 அன்று மக்களவையில் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அவர்கள் அறிவித்தார். எனினும் அத்தீர்மானத்தில் போர்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்குரிய வாய்ப்பில்லாத வகையில் வலுவற்றதாக அமைந்திருப்பதால் அதில் திருத்தம் கொண்டுவந்து போர்குற்றம் மற்றும் இனப்படுகொலை மீதான விசாரணைக்கு வழிவகுக்க இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் 22.03.2012 அன்று காலை நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஒரு மணி நேரம் ஆர்பாட்டம் செய்தார்.
நாடாளுமன்றத்தின் முதன்மை வாயிலின் எதிரே அமைந்துள்ள காந்தி சிலையின் முன்பு காலை 10 மணி முதல் 11 மணி வரையில் அவர் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். வேறு சில கோரிக்கைகளுக்காக திரினாமுல் காங்கிரசார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் அப்பகுதியில் தனித்தனியே திரளாக நின்று ஆர்பாட்டம் செய்தனர். அப்போது தொல்.திருமாவளவன் மட்டும் தனியே ஆங்கிலம் மற்றும் தமிழில் முழக்கங்களை எழுப்பியவாறு அப்போராட்டத்தை நடத்தினார். அதாவது "save tamils, save justice" , "save human rights, save tamil lands" என்று ஆங்கிலத்திலும் " இந்திய அரசே, இந்திய அரசே ! ஈழத்தமிழர்களை காப்பாற்று! மனித உரிமைகளை காப்பாற்று! திருத்தம் செய்! திருத்தும் செய்! அய்.நா மன்ற தீர்மானத்தில் போற்குற்றத்தை விசாரிக்க, இனப்படுகொலையை விசாரிக்க திருத்தம் செய்! திருத்தம் செய்!" என்று தமிழிலும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார். அத்துடன் "implement a permanent political settlement for eelam tamils, pressurize U N sponsored independent investigation", "amend the resolution to investigate war crimes and genocide" ஆகிய கோரிக்கைகளை கொண்ட முழக்க அட்டைகளை கையில் ஏந்தியவாறும் அம்முழக்கங்களை உரத்து முழங்கியவாறும் அறப்போராட்டத்தில் தொல்.திருமாவளவன் ஈடுப்பட்டார். அப்போது தமிழகத்தைச் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.லிங்கம் அவர்களும், திரு.காந்திசெல்வன் அவர்களும் அவ்விடத்திற்கு வந்து தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்திவிட்டு சென்றனர்.சரியாக 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துகொண்டு மக்களவைக்கு சென்றார்.
இந்திய அரசு இத்தீர்மானத்தை ஆதரிப்பதாக உறுதியளித்த பிறகு தொல்.திருமாவளவன் அவர்களின் இப்போராட்டம் தேவையற்றது என்பது சிலரின் கருத்தாக இருந்தாலும் அத்தீர்மானத்தை வலுவாக்கும் வகையில் திருத்தம் கொண்டுவருவது இந்திய அரசின் கடமை என்று சுட்டிக்காட்டுவதற்காகவே இப்போராட்டத்தை தாம் மேற்கொண்டிருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டார்.
தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போயுள்ளனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சிப்பதும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லாததைப் போலக் கூறி, பொதுமக்களை ஏமாளிகளாக்க நினைப்பதும் வேடிக்கையாகவுள்ளது. 


    பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இதரபெரும் தொழில் நிறுவனங்களுக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்குகிறது. அதுவும் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி அந்நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் தமிழக அரசு, ஏழை-எளிய மக்களின் தலையில் இடிவிழுந்ததைப் போன்ற அறிவிப்பைச் செய்துள்ளது. ஏற்கனவே, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் தாங்க முடியாத அளவில் அல்லல்படும் அடித்தட்டு மக்களின் அடிவயிறு பற்றி எரியும் வகையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். 



    மிக்சி, க்ரைண்டர் போன்றவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, அவற்றைப் பயன்படுத்த இயலாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது வாக்களித்த மக்களைத் தண்டிப்பதாகவே அமைந்துள்ளது. இனி சாதாரண மக்கள் கடந்த காலங்களில் பயன்படுத்தியதைப் போல மண்ணெண்ணெய் விளக்குகளையே வீடுகளில் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படலாம்.  தமிழகம் மெல்ல மெல்ல இருண்ட தமிழகமாக மாறி வருகிறது. இந்நிலையிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற, கட்டண உயர்வு சுமைகளிலிருந்து மக்களை மீட்க, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை முழுமையாகத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.  இக்கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 05.04.2012 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவண்
தொல். திருமாவளவன்
தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போயுள்ளனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சிப்பதும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லாததைப் போலக் கூறி, பொதுமக்களை ஏமாளிகளாக்க நினைப்பதும் வேடிக்கையாகவுள்ளது. 


    பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இதரபெரும் தொழில் நிறுவனங்களுக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்குகிறது. அதுவும் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி அந்நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் தமிழக அரசு, ஏழை-எளிய மக்களின் தலையில் இடிவிழுந்ததைப் போன்ற அறிவிப்பைச் செய்துள்ளது. ஏற்கனவே, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் தாங்க முடியாத அளவில் அல்லல்படும் அடித்தட்டு மக்களின் அடிவயிறு பற்றி எரியும் வகையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். 



    மிக்சி, க்ரைண்டர் போன்றவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, அவற்றைப் பயன்படுத்த இயலாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது வாக்களித்த மக்களைத் தண்டிப்பதாகவே அமைந்துள்ளது. இனி சாதாரண மக்கள் கடந்த காலங்களில் பயன்படுத்தியதைப் போல மண்ணெண்ணெய் விளக்குகளையே வீடுகளில் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படலாம்.  தமிழகம் மெல்ல மெல்ல இருண்ட தமிழகமாக மாறி வருகிறது. இந்நிலையிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற, கட்டண உயர்வு சுமைகளிலிருந்து மக்களை மீட்க, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை முழுமையாகத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.  இக்கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 05.04.2012 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவண்
தொல். திருமாவளவன்
கடந்த 23-3-2012 அன்று கூடங்குளம் அணுஉலைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகக் கலந்துகொண்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.


இந்நிலையில் சென்னை திரும்பிக்கொண்டிருந்த வன்னிஅரசு, இராஜபாளையம் அருகே க்யூ பிராஞ்ச் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.  



நேற்று அவருக்கு ஜாமின் வழங்கிய நிலையில், இன்று காலை திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  






அவரை கட்சியின் மாநில நிர்வாகிகள் ஏ.சி. பாவரசு, உஞ்சைஅரசன், தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், ப.பூவிழி, ஆதிரை, மாவட்ட நிர்வாகிகள் எல்லாளன், ஆ.விடுதலைச்செல்வன், இர.செந்தில், சிவகாசி இராசா, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாதன், அரசு மற்றும் ஏராளமானோர் சிறைவாயிலில் வரவேற்றனர். பின்னர் அருகிலிருந்த அம்பேத்கர் சிலைக்கு வன்னிஅரசு மாலை அணிவித்தார்.
கடந்த 23-3-2012 அன்று கூடங்குளம் அணுஉலைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகக் கலந்துகொண்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.


இந்நிலையில் சென்னை திரும்பிக்கொண்டிருந்த வன்னிஅரசு, இராஜபாளையம் அருகே க்யூ பிராஞ்ச் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.  



நேற்று அவருக்கு ஜாமின் வழங்கிய நிலையில், இன்று காலை திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  






அவரை கட்சியின் மாநில நிர்வாகிகள் ஏ.சி. பாவரசு, உஞ்சைஅரசன், தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், ப.பூவிழி, ஆதிரை, மாவட்ட நிர்வாகிகள் எல்லாளன், ஆ.விடுதலைச்செல்வன், இர.செந்தில், சிவகாசி இராசா, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாதன், அரசு மற்றும் ஏராளமானோர் சிறைவாயிலில் வரவேற்றனர். பின்னர் அருகிலிருந்த அம்பேத்கர் சிலைக்கு வன்னிஅரசு மாலை அணிவித்தார்.
2012-13ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை: புதிய வரி விதிப்புகளை  தமிழக அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்!
- தொல்.திருமாவளவன் வேண்டுகோள்


2012-2013ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ. 1500 கோடி அளவுக்கு புதிய வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் அடித்தட்டு மக்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் இந்த வரி விதிப்பு அமைந்துள்ளது.  கோதுமை, ஓட்ஸ், இன்சுலின் மருந்து போன்றவற்றுக்கு மதிப்புக்கூட்டு வரியை விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பிற இன்றியமையாத பொருள்களின் வரிகளை உயர்த்தியிருப்பதன் மூலம் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

19,000 கோடி ரூபாய் துண்டு விழும் நிலையில் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள தமிழக அரசு இலவசத் திட்டங்களுக்காக 2,000 கோடி ரூபாயை விரயம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் பெருமளவில் வருமானம் வரக்கூடிய கோயில்களில் 24 மணி நேரமும் அன்னதானத் திட்டம் அறிவித்திருப்பதும், ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களைவிட இத்தகைய இலவசத் திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவது மீண்டும் உறுதியாகிறது. இஸ்லாம், கிறித்தவம் போன்ற சிறுபான்மைச் சமூகத்தினரைப் புறக்கணிப்பதாகவும் இவ்வறிவிப்பு அமைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட பல செயல்திட்டங்கள் நடைமுறைக்கே வரவில்லை.  இந்நிலையில் புதிய பல செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இவை வெறும் அறிவிப்புகளாகவே நின்றுவிடுமா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.  இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய செயல்திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு பெரும் சிக்கலாக உள்ளது. ஏறத்தாழ 4000 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உடன்குடி மின்திட்டம் பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் மீண்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, மின் சிக்கலைச் சமாளிப்பதற்கான புதிய திட்டங்கள் ஏதுமில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் உணவுக் கட்டணத்தை முறையே ரூ.650, ரூ.750ஆக உயர்த்தியிருப்பதும், ஈழத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அறிவிப்பு செய்திருப்பதும் வரவேற்கத்தகுந்தது.

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக ரூ. 1000 கோடியும், பேரிடர் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 850 கோடியும் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

கல்வி உரிமைச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

மற்றபடி தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பாராட்டுதலுக்குரிய அறிவிப்புகள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.  ஏற்கனவே இந்திய அரசு சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை விதித்துள்ள நிலையில், தமிழக அரசு 1500 கோடி ரூபாய் அளவிலான புதிய வரிவிதிப்பை ஏழை எளிய மக்கள் மீது சுமத்தியிருப்பது வேதனையளிக்கிறது.

எனவே தமிழக அரசு புதிய வரி விதிப்புகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.  அடித்தட்டு மக்களை வரிச்சுமைகளிலிருந்து மீட்க முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
- இவண்
தொல்.திருமாவளவன்